புதுக்கோட்டைக்கு வந்த தேவேந்திர பட்நாவிஸ்  - யார் இந்த `கேப்டன்' தமிழ்ச்செல்வன்?  | mumbai based tamil MLA who is t this'captain 'tamilselvan?

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (14/06/2019)

கடைசி தொடர்பு:11:15 (14/06/2019)

புதுக்கோட்டைக்கு வந்த தேவேந்திர பட்நாவிஸ்  - யார் இந்த `கேப்டன்' தமிழ்ச்செல்வன்? 

ந்தியாவின் மாபெரும் நகரம் மும்பை. இங்கே, லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். மட்டுங்கா, சயான், ஆன்டோப் ஹில், தாராவி போன்ற பகுதிகளுக்குச் சென்றால் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். ஏராளமான தமிழ்ப் பள்ளிகள், தமிழர்கள் நடத்தும் கல்லூரிகளும் மும்பையில் உள்ளன. மட்டுங்கா பகுதியை `மினி மெட்ராஸ்' என்றே சொல்கிறார்கள். மும்பையில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசித்தாலும் எம்.எல்.ஏ-க்கள் ஆவது என்பது குதிரைக் கொம்புதான். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியம் என்ற தமிழர் மும்பையில் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். அதற்குப் பிறகு எம்.எல்.ஏ ஆனவர்தான் இந்த தமிழ்ச்செல்வன்.   

தேவேந்திர பட்னாவீசுடன் மும்பை தமிழ்செல்வன்

மும்பைக்கு தமிழ்ச்செல்வன் சென்றதே விபத்துபோல நடந்த விஷயம்தான். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்கோட்டை அருகே உள்ள பிலாவிடுதி என்கிற கிராமம்தான் இவரின் சொந்த ஊர். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகக் கூறி, ஏஜென்ட் ஒருவர், தமிழ்ச்செல்வனை மும்பைக்கு அழைத்துச் சென்று, விமான நிலையத்தில் விட்டுவிட்டு ஓடிவிட்டார். துபாய்க்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவதை தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை. மும்பையிலேயே தங்கிவிட்டார். 11-ம் வகுப்பு வரை படித்துள்ள, தமிழ்ச்செல்வன் மும்பை ரயில் நிலையங்களில் கூலியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 

தமிழ்செல்வன்

பின்னர், படிப்படியாக உயர்ந்தார். சயான், மட்டுங்கா, தாராவி பகுதி தமிழர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார். மும்பையில் எந்தப் பிரச்னை என்றாலும் தமிழ்ச்செல்வன் முதல் ஆளாக ஓடுவார். தாஜ் ஹோட்டலில் குண்டு வெடித்தபோது, தள்ளுவண்டியில் படுக்க வைத்து 50 பேரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றினார். இதற்காக, மகாராஷ்டிர மாநில அரசு இவருக்கு விருது கொடுத்து பாராட்டியது. இவரின் உதவி செய்யும் குணத்துக்காக மும்பை தமிழர்கள் இவரை `கேப்டன்' தமிழ்ச்செல்வன் என்பார்கள். தமிழர்களிடையே பிரபலமாக இருந்த தமிழ்ச்செல்வனை பாரதிய ஜனதா கட்சி தன் பக்கம் இழுத்துக்கொண்டது. 

தமிழ்செல்வன்

கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் சயான் - கோலிவாடா தொகுதியில் போட்டியிட தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எதிர்த்துப் போட்டியிட்டது `மண்ணின் மைந்தர்களின் கட்சி' என்று சொல்லிக்கொள்ளும் சிவசேனாவின் சத்தம்கர் மங்கேஷ். தமிழர்கள் ஓட்டு அப்படியே கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு விழ, கடுமையான போட்டிக்கிடையே 2,733 ஓட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்.

தற்போதைய மகாராஷ்டிர சட்டமன்றத்தில் தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏ இவர்தான். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடமும் தமிழ்செல்வனுக்கு நெருக்கம் உண்டு. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர் . இவரின், மகள் வைஷாலிக்கும் புதுக்கோட்டை தொண்டமான் குடும்பத்தைச் சேர்ந்த துரை ராஜுவுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக, புதுக்கோட்டை வந்திருந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ மகளின் திருமணத்துக்கு மகாராஷ்டிர மாநில முதல்வர் தன் நேரத்தைச் செலவழித்து வந்திருந்தது புதுக்கோட்டை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க