விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு! | Vikravandi Dmk mla Rdhamani dies

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (14/06/2019)

கடைசி தொடர்பு:11:29 (14/06/2019)

விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.

ராதாமணி


விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.ராதாமணி (வயது 67). திருமணம் செய்துகொள்ளாத இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில், கடந்த சில நாள்களாக நோயின் தீவிரம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ராதாமணி உயிரிழந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த ராதாமணி தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட அவைத்தலைவராக இருந்தார். மேலும் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், வேளான் விற்பனைக் குழு தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். மறைந்த ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்த பகல் 12 மணியளவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க