``முதல்போக சாகுபடி செய்யல; மழை கைகொடுக்குமானு தெரியல” - கலங்கும் தேனி விவசாயிகள்! | theni farmers worried about mullaiperiyar dam issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:13:00 (14/06/2019)

``முதல்போக சாகுபடி செய்யல; மழை கைகொடுக்குமானு தெரியல” - கலங்கும் தேனி விவசாயிகள்!

ஜூன் மாதம் தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு வயல்கள் அனைத்தும் விவசாயப் பணிகள் ஏதும் நடக்காமல் அப்படியே உள்ளன. காரணம் முல்லைப்பெரியாறு அணையில் போதிய நீர் இல்லாததுதான்.

கம்பம் பள்ளத்தாக்கு லோயர்கேம்ப் முதல் தேனி நகரின் அருகே உள்ள பழனிசெட்டிபட்டி வரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இவை அனைத்திலும் முல்லைப்பெரியாறு ஆற்றை நம்பியே இருபோக சாகுபடி செய்யப்படும். முதல்போக நெல் சாகுபடிக்கான நடவுப்பணியானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும். அதற்கு ஏற்றார்போல முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு என தண்ணீர் திறக்கப்படும். இந்த நிலையில், போதிய மழை இல்லாததால், இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் இல்லாமல் போனது. தற்போது 112.25 அடி மட்டுமே அணையில் தண்ணீர் உள்ளது.

இதனால், முதல்போக சாகுபடி செய்ய முடியாமல் முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால், மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டமான தேனியில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளனர் விவசாயிகள்.

``எப்போதும் முதல்போக சாகுபடியை ஜூன் மாதத்தில் நடவு செய்து, வடகிழக்குப் பருவமழைக்குள் அதனை அறுவடை செஞ்சு, இரண்டாம் போக நெல் சாகுபடிக்குத் தயாராகிடுவோம். ஆனா, இந்த வருஷம் இன்னும் முதல்போக சாகுபடி செய்யல… மழை கைகொடுக்குமானு தெரியல..” என கவலையோடு கூறுகிறார்கள் விவசாயிகள்.