நடிகர் விஷால், நடிகை காயத்ரி சாய் விமர்சித்த `கொங்கு நாட்டு இளவரசி' சிக்கிய கதை! | vishvadharshini arrested after 6 months for Criticized actor vishal and gayatri sai

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (14/06/2019)

கடைசி தொடர்பு:12:25 (14/06/2019)

நடிகர் விஷால், நடிகை காயத்ரி சாய் விமர்சித்த `கொங்கு நாட்டு இளவரசி' சிக்கிய கதை!

நடிகர் விஷால் மற்றும் 16 வயது சிறுமி, அவரின் அம்மாவான நடிகை காயத்ரி சாய் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பிய கொங்கு நாட்டு இளவரசியை சென்னை போலீஸார் கைதுசெய்தனர். 

நடிகை புகாரில் சிக்கிய விஷ்வதர்ஷினி

 
`அஞ்சலி' படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். இவர், சென்னையில் குடியிருந்துவருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், `கொங்கு நாட்டு இளவரசி' என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட்டு வைத்திருக்கும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்வதர்ஷினி என்பவருக்கும் நடிகை காயத்ரி சாய்க்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், தி.நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை காயத்ரி சாய் சென்றார். அப்போது அங்கு வந்த விஷ்வதர்ஷினி, நடிகை காயத்ரி சாயுடன் செல்ஃபி எடுத்துள்ளார். 

இதன்பிறகு, ஒருநாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி, வீடு ஷிஃப்ட் செய்கிறேன், அவசரமாக 20,000 ரூபாய் கடனாக வேண்டும் என கேட்டுள்ளார். உடனே காயத்ரியும் பணத்தைக் கொடுத்துள்ளார். அதன்பிறகுதான் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஃபேஸ்புக்கில் நடிகை காயத்ரி சாய் மற்றும் அவரின் 16 வயது மகள் குறித்தும் அவதூறான கருத்துகளை விஷ்வதர்ஷினி பதிவுசெய்துள்ளார். ஒருகட்டத்தில் நடிகர் விஷால், காயத்ரி சாய் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகவும் குறிப்பிட்டு பதிவுசெய்திருந்தார். இந்தப் பதிவு வைரலானது. 

நடிகை காயத்ரி சாய்  

இந்த நிலையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ல் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு, இ-மெயிலில் நடிகை காயத்ரி சாய் புகார் அனுப்பினார். அந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய மகளிர் ஆணையம், உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி, விஷ்வதர்ஷினி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் தேடிவந்தனர். 

விஷ்வதர்ஷினி தரப்பில், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடியானது. கடந்த மூன்று மாதங்களாக விஷ்வதர்ஷினியை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார், விஷ்வதர்ஷினியை நேற்று திருச்செங்கோட்டில் வைத்து கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதுகுறித்து நடிகை காயத்ரி சாயிடம் பேசினோம். ``நான், தமிழில் 'அஞ்சலி' படத்தில் நடித்துள்ளேன். அதன்பிறகு, தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். மிஸ் சென்னை போட்டியில் ரன்னரானேன். மாடலிங், ஃபேஷன் டிசைனராகவும் இருந்துவருகிறேன். எனக்கு சிறுவயதில் திருமணமாகி வெளிநாட்டில் கணவருடன் செட்டிலானேன். இந்த நிலையில், என் கணவர் இறந்த பிறகு பிசினஸை கவனித்துவருகிறேன். இந்தச் சமயத்தில்தான் என்னுடைய ஃபேஸ்புக்கில் தோழியாக அறிமுகமானார் விஷ்வதர்ஷினி. தி.நகரில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றபோதுதான் விஷ்வதர்ஷினியை நேரில் பார்த்தேன். பெண்கள், சமூகம் தொடர்பான கருத்துகளை நாங்கள் பகிர்ந்துகொண்டோம். 

 நடிகை காயத்ரி சாய்

இந்தச் சமயத்தில்தான் என்னிடம் அவர் 20,000 ரூபாய் கடன் வாங்கினார். அந்தப் பணத்தை திரும்ப கேட்டபோதுதான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு, என்னைப்பற்றி அவதூறான தகவல்களை சமூகவலைதளத்தில் விஷ்வதர்ஷினி வெளியிட்டார். நான் அமைதியாக இருந்தேன். அதன்பிறகு, என்னைப் பழிவாங்க என் மகள்குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். சில வீடியோக்களையும் அவர் பதிவுசெய்தார். அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஆன் லைனில் புகார் அளித்தேன். அதன்பேரில், விஷ்வதர்ஷினி மீது 26.11.2018-ல் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. அதன்பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். தற்போது, அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதன்மூலம் எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் கமிஷனருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

 நடிகர் விஷாலின் பதிவுகுறித்து நடிகை காயத்ரி சாயிடம் கேட்டதற்கு, "விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார். அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும்"என்றார். 

நடிகை புகாரில் கைதான விஷ்வதர்ஷினி

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, ``நடிகர் விஷால் தொடர்பான சமூக வலைதளப் பதிவுக்காக விஷ்வதர்ஷினி கைதுசெய்யப்படவில்லை. நடிகை காயத்ரி சாயின் மகளான 16 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில்தான் விஷ்வதர்ஷினியை போக்ஸோ சட்டத்தின் கீழ்   கைதுசெய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. அவர் பதிவு செய்த வீடியோக்கள், கருத்துகள்தான் இந்த வழக்கின் ஆதாரம்" என்றனர். 

விஷ்வதர்ஷினி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``இந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளோம். ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். விஷ்வதர்ஷினி அடிக்கடி சொல்வார், பெண்களுக்கு எதிரி பெண்கள்தான். அது, விஷ்வதர்ஷினி சம்பவத்தில் நிஜமாகிவிட்டது. சிறையிலிருந்து வெளியில் வந்தபிறகு சில உண்மைகளை விஷ்வதர்ஷினி சொல்வார். ஏற்கெனவே விஷ்வதர்ஷினி, தன்னுடைய ஃபேஸ்புக்கில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பல கருத்துகளைப் பதிவுசெய்துள்ளார். அப்படிப்பட்டவர் எப்படி இப்படிச் செய்வார்?" என்றனர். 

விஷ்வதர்ஷினி ஃபேஸ்புக் பக்கத்தில் 'சத்தியமே வெல்லும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.