`ஓ.பி.எஸ் வீட்டுக்கே இந்த நிலைமையா?' - அலட்சிய அதிகாரிகளால் அப்செட்! | sewage problem in ops house

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (14/06/2019)

கடைசி தொடர்பு:13:20 (14/06/2019)

`ஓ.பி.எஸ் வீட்டுக்கே இந்த நிலைமையா?' - அலட்சிய அதிகாரிகளால் அப்செட்!

ஓ பி எஸ்

துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்., சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள பொதிகை இல்லத்தில் வசித்து வருகிறார். 2006-ல் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றதில் தொடங்கி, 15 வருடங்கள் இந்த வீட்டில்தான் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சென்டிமென்ட்டாக இந்த வீடு தனக்கு ராசியானதாக அவர் கருதுவதால், தர்மயுத்தக் காலத்தில்கூட பல அரசியல் முடிவுகளை இந்த வீட்டில் இருந்துதான் எடுத்தார். இந்த வீட்டிலிருந்து ஓ.பி.எஸ்ஸை வெளியேற்ற அப்போது எடப்பாடி அரசு நோட்டீஸ் எல்லாம் அனுப்பியது. போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே, நடிகை பத்மினியின் சகோதரி ராகினியின் வீட்டில் தற்காலிகமாக குடிபெயர்ந்தார். ஆனாலும் க்ரீன்வேஸ் சாலை வீட்டை மட்டும் காலி செய்யவில்லை.

மிகவும் சென்டிமென்ட்டாக பார்க்கப்படும் ஓ.பி.எஸ்ஸின் பொதிகை இல்ல வீட்டில் கடந்த வாரம் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை போன் செய்தும், அவர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லையாம். வீட்டிலிருந்து மெயின் கேட் வரையில் செல்லும் காவாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால், அருகிலிருக்கும் மற்ற சில அமைச்சர்கள், நீதிபதி வீட்டிலும் சாக்கடை அடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். வீடே நாற்றம் எடுக்கத் தொடங்கிவிட்டதாம்.

கடுப்பான ஓ.பி.எஸ். வீடு மேலாளர்கள், துணை முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் விஷயத்தைக் கூறியுள்ளனர். துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்து கழிவுநீர் அகற்று வாரிய உயரதிகாரி ஒருவருக்கே போன் போட்டு சத்தம் போட்ட பிறகுதான், கழிவு நீர் அகற்று லாரிகள் பொதிகை இல்லத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. இரண்டு லாரிகள் நிறைய கழிவுநீரை அகற்றிய பின்னரே வீடு நல்ல நிலைமைக்கு வந்துள்ளது. சாக்கடை அடைப்பை சரிசெய்யவே இரண்டு நாள்கள் ஆகிவிட்டதாம். ‘ஒரு துணை முதல்வர் வீட்டுக்கே இந்த நிலைமை என்றால், சாமானியர்களை இந்த அதிகாரிகள் எந்த அளவுக்கு மதிப்பார்கள்?’ என உஷ்ணமாக இருக்கிறது ஓ.பி.எஸ். வீடு.  

இதுகுறித்து கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், ``சென்னை முழுவதும் சாக்கடை அடைப்பு, குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவது போன்ற புகார்கள் அதிகமாக வந்ததால், உடனடியாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு லாரியை அனுப்ப முடியவில்லை. ஆனால், அதிகாரிகள் உடனே சென்று நிலைமையைக் கண்காணித்தனர். தற்போது கழிவுநீர் குழாய் செல்லும் பாதை சரிசெய்யப்பட்டுவிட்டது” என்றனர்.