ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம்... வந்தாச்சு புது தொழில்நுட்பம்! | Livestock Fodders cultivated from the hydroponics method

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/06/2019)

கடைசி தொடர்பு:13:40 (14/06/2019)

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம்... வந்தாச்சு புது தொழில்நுட்பம்!

மிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டுவிட்டன. ஆழ்துளைக் கிணறுகளும் கைகொடுக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை உற்பத்தி செய்யமுடியாமல் திணறிவருகின்றனர் விவசாயிகள். இவர்களுக்கு உதவுவதற்காக அரசும், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தீவனங்களை உற்பத்தி செய்யச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் மண்ணில்லாமல், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுமைக்குடில் அமைத்து தீவனம் வளர்க்கும் வழிமுறைகள் விவசாயிகள் மத்தியில் கவனம் ஈர்த்துவருகின்றன. இந்தத் தொழில்நுட்பம் தற்போது சேலத்துக்கு வந்துள்ளது.

ஹைட்ரோபோனிக்ஸ் இயந்திரம்

இதுபற்றி சேலம் கால்நடை மருத்துவர்களிடம் பேசினோம், ``கோடைக்காலத்தில் தீவனப் பற்றாக்குறையைப் போக்க  ஹைட்ரோபோனிக் மூலம் பசுந்தீவனம் உற்பத்திசெய்ய, இந்தப் பெட்டிகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படுகிறது. அதாவது, அரசு மானியம் 75 சதவிகிதத்துடன் 25 சதவிகித தொகையை மட்டும் செலுத்தி இந்தப் பெட்டிகளை கால்நடைத்துறை அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம். " என்றனர்.

இதற்கான தேவை மற்றும் பயன்பாடு குறித்து கேட்டோம், ``இதை அமைக்க 100 சதுர அடி இடத்தில் பாலிவினைல் குளோரைடு பைப்புகள், பாலி புரொபைலைன் பிளாஸ்டிக் தட்டுகள், மின்மோட்டார் மின் இணைப்பு வசதி, கோணிச் சாக்கு மற்றும் குளிர்நிலையை அறிய தெர்மாமீட்டர் அவசியம். இந்த உபகரணம் 8 அடுக்குகள் மற்றும் 16 தட்டுகளைக் கொண்டது. அதிகப்படியான தண்ணீர் தேவையை மேலும் குறைப்பதற்கு நீர் தெளிப்பான் பொருத்தப்பட்டு, மின்மோட்டார் கொண்டு தெளிக்கலாம். தானியங்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது நன்கு முற்றி முளைவிடக் கூடியதாகவும், 12 சதவிகிதம் ஈரப்பதம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். தண்ணீரை ஊற்றிவிடக் கூடாது. தெளிக்க வேண்டும்.

இயந்திரம்

வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை தேவை, காற்றில் ஈரப்பதம் 80 முதல் 85 சதவிகிதம் இருக்க வேண்டும். ஹைட்ரோபோனிக்ஸ் தீவனம் சுவை கொண்டவை என்பதால் எருமைக்கு 15 முதல் 20 கிலோவும் ஆடுகளுக்கு ஒன்று முதல் இரண்டு கிலோவும் அளிக்கலாம். பொதுவாக ஒரு கிலோ தானியத்துக்கு 6 முதல் 7 கிலோ பெற முடியும். 8 நாள்களில் 100% பசுந்தீவன உற்பத்தி செய்யலாம். பூச்சி மருந்து, உரம் வேறு வகை மருந்துகளும் அளிக்கத் தேவையில்லை. மண்ணில் தீவனம் சாகுபடி செய்வதற்கு தேவைப்படும் நீரை ஒப்பிடுகையில் இதில் மிகக் குறைந்த அளவே செலவாகிறது. மக்காச்சோளம், கோதுமை, சோளம், கொள்ளு, பார்லி உள்ளிட்ட வகைகளை மண்ணில்லா தீவன முறையில் வளர்க்கலாம். பசுந்தீவனத்தில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால் கால்நடைகளுக்கு இனப்பெருக்கமும், சினை பிடிக்கும் தன்மையும் அதிகரிக்கிறது" என்றனர்.