`அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்; பதறிய மக்கள்' - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மர்ம நபர்கள் அட்டூழியம் | bomb blast neat by srivilliputtur

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:00 (14/06/2019)

`அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்; பதறிய மக்கள்' - ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மர்ம நபர்கள் அட்டூழியம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராதவிதமாக குண்டுவெடித்தது. இந்தச் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வெடிகுண்டு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்து இன்று காலை பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாரிமுத்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தார். அப்போது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகளை மர்மநபர்கள் தயாரிக்க முயன்றதும், அப்போது எதிர்பாராவிதமாக அது வெடித்ததும் தெரியவந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் பயங்கரமான சத்தம் கேட்டு அருகே வசிக்கும் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் விபத்து நடந்த பகுதிகளையும், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் ஆய்வு செய்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டுமாடுகள் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. எனவே ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சிக்காக வனஉயிரினங்கள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்த மர்ம நபர்கள் அங்கே இருந்து தப்பியோடியதால் எத்தனை பேர் இதில் ஈடுபட்டனர், யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.