`கக்கன் தொகுதியிலயா இப்படி..!' - 15 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் | madurai melur mla office opened after 15 years

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:40 (14/06/2019)

`கக்கன் தொகுதியிலயா இப்படி..!' - 15 ஆண்டுகளுக்குப்பின் திறக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ, அலுவலகம் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டது.

எம் எல் ஏ அலுவலகம்

மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதியில்தான் முன்னாள் அமைச்சர் கக்கன் வெற்றிபெற்றுச் சிறப்பாக செயல்பட்டார். மேலூர் பகுதியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றார். இந்த நிலையில், மேலூர் எம்.எல்.ஏ புதிய அலுவலகக் கட்டடம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. தற்போது மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் திறந்துவைத்தார். மேலூரில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் 2006-ல் எம்.எல்.ஏ. அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. அப்போதைய எம்.எல்.ஏ., ஆர்.சாமி மேலூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் கட்டடங்களைத் தனது அலுவலகமாகப் பயன்படுத்தினார். இதனால் அரசு சட்டமன்ற அலுவலகம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. தொடர்ந்து அவரே எம்.எல்.ஏ-வாக இருந்ததால் அரசுக் கட்டடம் பயனற்றுகிடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ., பெரியபுள்ளானும் இதைத் திறக்காமல் இழுத்தடித்தார். இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கறிஞர் பா.ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை அணுகிவந்தனர்.

பெரியபுள்ளான்

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த மேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் கட்டடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடந்து பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த அலுவலகத்தில் தெரிவிக்கலாம், இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.