`தேர்வின்போது மாணவரிடம் லஞ்சம்!' - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியிடை நீக்கம் | Tanjore Tamil university Assistant professor suspended over seeking bribe from student

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (14/06/2019)

கடைசி தொடர்பு:15:50 (14/06/2019)

`தேர்வின்போது மாணவரிடம் லஞ்சம்!' - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியிடை நீக்கம்

தேர்வு எழுதும் மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட உதவி பேராசியியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 38 ஆண்டுகளில் லஞ்சப் புகாரில் உதவி பேராசிரியர் ஒருவர் முதல் முறையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனியார் கல்வியியல் கல்லூரி ஒன்றில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியியல் தேர்வு கடந்த மே மாதம் 15 ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், தேர்வு கண்காணிப்பு அலுவலராக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் உதவி பேராசிரியரான முத்தையன் நியமிக்கப்பட்டு அந்தப் பணிக்குச் சென்றார். சுமார் 200 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வை எழுதிய நிலையில் ஒவ்வொரு மாணவரும் ரூ.5,000 லஞ்சம் கொடுத்தால் தேர்வில் காப்பி அடித்துக் கொள்ளலாம் என முத்தையன் தொலைநிலைக் கல்வி நிர்வாகிகளிடமும், மாணவர்களிடமும் கேட்டுள்ளார். இதை மாணவர்கள் மற்றும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாததோடு, `எங்களால் நேர்மையாக என்ன எழுத முடியுமே, அதை எழுதிக் கொள்கிறோம்' எனக் கூறி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

முத்தையன்

இதையடுத்து தேர்வு எழுதும்போது செக்கிங் என்ற பெயரில் முத்தையன் அத்துமீறி நடந்துகொண்டதாகத் தெரிகிறது. மேலும், மாணவிகளிடமும் தவறாக நடந்து கொண்டுள்ளதாகப் புகார் எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் அங்கு தேர்வு எழுதியிருக்கிறார். அவரிடமும் சில்மிஷம் செய்து அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கிறார் முத்தையன் என்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியனுக்குப் புகார் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் சம்பவம் நடந்தது உண்மையா என விசாரிக்க குழு ஒன்றை நியமித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் நடந்தற்கான முகாந்திரம் உள்ளது என பாலசுப்பிரமணியனியடம் அறிக்கை கொடுத்துள்ளனர். பின்னர் உதவி பேராசிரியர் முத்தையனைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 38 ஆண்டுகளில் லஞ்சப் புகாரில் உதவி பேராசிரியர் ஒருவர் முதல் முறையாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தர் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ``உதவி பேராசிரியர் முத்தையன் தேர்வு உற்று நேக்கராக ராமநாதபுரத்தில் நடந்த தேர்வு மையத்திற்குச் சென்றார். அங்கு அவர் இதுபோன்று நடந்து கொண்டதாக புகார் வந்தது. இதை விசாரிப்பதற்கு குழு ஒன்றை அமைத்தேன். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முத்தையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் முழு விவரம் தெரிய வரும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க