கவிஞர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது! | Poet Sabarinathan Selected For Sahitya Academy's Yuva Puraskar Award

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (14/06/2019)

கடைசி தொடர்பு:18:59 (14/06/2019)

கவிஞர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது!

சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்' கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் சபரிநாதன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது முதல் தொகுப்பு 2011 ஆண்டு வெளியான `களம் காலம் ஆட்டம்'.

கவிஞர்

2016-ம் ஆண்டு வெளியான இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு `வால்'. வால் தொகுப்புக்காக 2017-ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் `குமர குருபரன்' விருதைப் பெற்றுள்ளார். 

பால் சாகித்ய புரஸ்கார் விருது மறைந்த எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது. தற்போது முதுகலைத் தமிழாசிரியையாகப் பணிபுரிந்துவரும் இவர். தனது 22 வயதில் கோகுலம் இதழில் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியவர். சிறார் இலக்கியத்துறையில், 12 நூல்கள் எழுதியுள்ளார்.

கவிஞர்

``குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்" என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். குழந்தைக்கவிஞர் செல்லகணபதி அவர்களுடன் இணைந்து ஊர்தோறும் சென்று குழந்தைகளை ஒருங்கிணைத்து அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் சார்பில், 24 ஆண்டுகளாக விழா நடத்தி வருபவர். தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, தமிழ்ச்செம்மல் விருது, இராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.