''எங்களுக்கான மறுவாழ்வு இது..!'' - மகிழ்ச்சியில் புழல் சிறைக்கைதிகள் | This is for our rehabilitation says Puzhal Prisoners

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/06/2019)

கடைசி தொடர்பு:19:20 (14/06/2019)

''எங்களுக்கான மறுவாழ்வு இது..!'' - மகிழ்ச்சியில் புழல் சிறைக்கைதிகள்

புழல் சிறையில் தண்டனைப் பெற்றுவரும் கைதிகளைக் கொண்டு, சென்னையில் புதிதாக பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. கைதிகளின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைப் புழல் சிறை நிர்வாகம் செய்துள்ளது.

கைதிகள்

சிறைகளில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த அல்லது நிறைவு செய்யும் நிலையில் உள்ள தண்டனைக் கைதிகளின் நன்னடத்தை மூலம், அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கான வாழ்வாதாரத்தைக் கட்டமைத்துத்தர முயற்சி செய்துவருகிறது தமிழக சிறைத்துறை. இதன் ஒருபகுதியாக, அவர்களை பெட்ரோல் பங்கில் வேலைக்காகத் தேர்வு செய்திருக்கிறது சிறைத்துறை. இதற்கு முன் கோவை, வேலூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறைகளில் உள்ள கைதிகளைக் கொண்டு பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புழல் சிறைக்குட்பட்ட 1.46 ஏக்கரில் 2 கோடி ரூபாய் மதிப்பில் பெட்ரோல் 'பங்க்' அமைக்கப்பட்டது. இதில் புழல் சிறையில் உள்ள 25 ஆயுள் தண்டனைக் கைதிகள் முதற்கட்டமாக வேலை செய்யவுள்ளனர். பெட்ரோல் பங்கில் வேலை செய்வதற்கான பயிற்சியும் கைதிகளுக்கு வழங்கப்பட்டது. 10 முதல்நிலைத் தலைமைக் காவலர்கள் மற்றும் நான்கு காவலர்கள் இங்கு பணிபுரியும் கைதிகளைக் கண்காணிப்பர். 

புழல்

''எங்களுக்கான மறுவாழ்வு இது. விடுதலையாகி வெளியில் சென்றாலும், குற்றச்செயல்களை மறந்து வாழ இது உதவியாக இருக்கும். இந்த வேலைவாய்ப்பின் மூலம், பொதுமக்களிடம் சகஜமாகப் பழகப்போகிறோம். இதை நினைக்கும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறைத்துறைக்கும் தமிழக அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்கின்றனர் கைதிகள்.