``கொலை, கொள்ளையைத் தடுக்க 100 சிசிடிவி கேமராக்கள்" - ஆம்பூரில் அசத்தல் முயற்சி | Ambur police to install 100 CCTV cameras in the suburban premises to control theft and murder

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/06/2019)

கடைசி தொடர்பு:19:40 (14/06/2019)

``கொலை, கொள்ளையைத் தடுக்க 100 சிசிடிவி கேமராக்கள்" - ஆம்பூரில் அசத்தல் முயற்சி

ஆம்பூர்

வேலூர் மாவட்டம், ஆம்பூர் தொழிற்சாலைகள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் நகரம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம்பூர் உட்பட கொலை, கொள்ளை, விபத்து என அடுத்தடுத்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இருப்பினும் கொலை கொள்ளை விபத்து போன்ற சம்பவங்களைத் தடுப்பது என்பது காவல்துறைக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

இதைக் குறைக்கும் விதமாகப் பொதுமக்கள் மற்றும் ஆம்பூர் நகர இன்ஸ்பெக்டர் ஆகியோர் முயற்சியில் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சாலைகள், தெருக்கள், கோயில்கள், வங்கிகள் எனப் பல்வேறு இடங்களில் 100 கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆம்பூர் நகர இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். அவர் ``கேமராவைப் பொருத்தி வருவதற்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இது எங்களுக்காக நீங்கள் செய்யும் உதவி அதற்குத் தேவையான பணத்தை நாங்கள் தருகிறோம் என்று பொதுமக்களும் தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து இதற்கான மொத்தச் செலவையும் ஏற்று அரசோடு சேர்ந்து குற்றங்களைத் தடுக்க முயற்சி எடுத்துவருகின்றார்கள். மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் முதற்கட்ட பணியைச் செய்துவருகிறோம். 24 மணி நேரமும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். இதனால் குற்றச் சம்பவங்களை குறைக்க மற்றும் தடுக்க உதவியாக இருக்கும். தற்போது 75 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன, எஞ்சியுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்" என்றார்.