`கல்யாணமாகி மூணு வருஷம்கூட முடியல!’ - சோகத்தில் தத்தளிக்கும் விமானப்படை வீரரின் குடும்பம் | Air Force man who death in an32 aircraft of indian air force

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (14/06/2019)

கடைசி தொடர்பு:20:40 (14/06/2019)

`கல்யாணமாகி மூணு வருஷம்கூட முடியல!’ - சோகத்தில் தத்தளிக்கும் விமானப்படை வீரரின் குடும்பம்

``ஏ.என் 32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட வினோத் ஹரிஹரன் என்பவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கோவையில் உள்ள அவரது  குடும்பத்தினர் தீராத சோகத்தில் தத்தளிக்கிறார்கள்"

விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்

கடந்த, 3-ம் தேதி அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்குச் சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ-என் 32 ரக போர் விமானத்தின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை வீரர்கள் காணாமல்போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் அருணாசலப் பிரதேசத்தின் சியாங் மலைப்பகுதியில் அந்தப் போர் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்த விபத்தில் இறந்த 13 பேரின் புகைப்படங்களையும் இந்திய விமானப் படை இன்று வெளியிட்டது. அதில், கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வினோத் ஹரிஹரன் என்பவரின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

வினோத் ஹரிஹரன் பிறந்தது கேரளாவாக இருந்தாலும், கல்லூரிப் படிப்பை கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்தான் முடித்துள்ளார். வினோத் ஹரிஹரனின் அண்ணன் விவேக் விமானப்படையில் பணியாற்றி வருகிறார். தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். இப்படியான குடும்பப் பின்னணியைக் கொண்ட வினோத்திற்கும் விமானப்படையில் சேர வேண்டும் என்பது லட்சியமாக இருந்துள்ளது. கடந்த 2011-ல் விமானப்படையில் சேர்ந்த வினோத் ஹரிஹரன் இந்திய விமானப்படையில் ஸ்குவாட் லீடராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு, புயல் வெள்ளம் கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தபோது, இந்திய விமானப்படையின் சார்பில் நடைபெற்ற மீட்புப் பணியில் வினோத் ஹரிஹரன் சிறப்பாகப் பணியாற்றியவர் என இந்திய விமானப்படையினர் நெகிழ்ந்துள்ளனர்.

வினோத் ஹரிஹரனுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆகின்றன.  கோவை சூலூர் விமானப்படையில் பணியாற்றிய அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அஸ்ஸாமிற்கு மாற்றப்பட்டுள்ளார். அஸாமில் இருந்த வினோத்தின் மனைவி, விடுமுறைக்காக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வினோத்தின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், இந்தக் கோர விபத்து குறித்து கிடைத்த தகவலால் வினோத்தின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த விபத்து நடந்து 10 நாள்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் உடல் பாகங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றைக் கொண்டு உடல்கள் அடையாளம் காணப்பட்டு நாளை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க