`சட்டவிரோதமாக நீர் உறிஞ்சுபவர்களுக்கு ரெய்டு!’ - நிலத்தடி நீரை அதிகரிக்க மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தீவிரம் | ias officer take action to increase ground water

வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (14/06/2019)

கடைசி தொடர்பு:21:44 (14/06/2019)

`சட்டவிரோதமாக நீர் உறிஞ்சுபவர்களுக்கு ரெய்டு!’ - நிலத்தடி நீரை அதிகரிக்க மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தீவிரம்

குடிநீர்

சென்னை தலைமைச் செயலகத்தில் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளை அழைத்து தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அவரச ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னையிலுள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்படியில்லாவிட்டால் சம்பந்தபட்ட வீட்டின் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்க முடிவுசெய்யபட்டுள்ளது.

நீர்

இதனை படிப்படியாக அமல்படுத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன்படி, சென்னையில் புதிதாக வீடு கட்டுபவர்கள், தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை அமல்படுத்தினால்தான் அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். அதேபோல ஏற்கெனவே மழை நீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்ட வீடுகளில், அதை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை  மெட்ரோ இன்ஜினீயர்கள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் நிலத்தடி நீரை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட அதிகாரிகள், மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். 

அதேபோல, சட்டவிரோதமாக மோட்டார் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி யார் யாரெல்லாம் சட்டவிரோதமாகச் செயல்படுகின்றனர் என்பதை அறியும் வகையில் ரெய்டு நடத்த மெட்ரோ வாரியம் தயாராகி வருகிறது. வணிக நிறுவனங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தண்ணீர் உறிஞ்சும் தகவல் கிடைத்தால், அருகிலிருப்பவர்கள் மெட்ரோ வாட்டர் தலைமையகத்துக்குத் தகவல் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படிச்  சட்டவிரோதமாக நீர் உறிஞ்சிய 70 பேரின்  குடிநீர் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகளைத் தீவிரமாக நடைமுறைபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க