Published:Updated:

`3 லட்சம் நல் உள்ளங்களால் ₹16 கோடி கிடைச்சிருச்சு; இனி அரசு இதை மட்டும் செய்யணும்!' - மித்ரா தந்தை

குழந்தை மித்ரா
News
குழந்தை மித்ரா

அரியவகை மரபணுக் கோளாறு சிகிச்சைக்கான மருந்தை வாங்குவதற்கு 16 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், ஒரு மாதத்திலேயே 16 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டிருக்கிறது.

`மித்ரா’ என்ற குழந்தையை உங்களுக்கு ஞாபமிருக்கிறதா? ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த குழந்தை மித்ராவை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டோம். `Save Mithra' என்று கடந்த ஒருமாத காலமாக சமூக வலைதளங்களில் பலரும் மித்ராவுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். குழந்தை மித்ராவுக்கு ஏற்பட்ட அரியவகை மரபணுக் கோளாறு நோயை சரிசெய்ய `ஒருமுறை மரபணு மாற்று சிகிச்சை’ செய்ய வேண்டும் எனவும், அந்த சிகிச்சைக்காக, வெளிநாட்டிலிருந்து வரவைக்க வேண்டிய மருந்தான `ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) விலை 16 கோடி ரூபாய் ஆகும் எனவும் மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.

குழந்தை மித்ரா
குழந்தை மித்ரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`இவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்டுவது?’ எனத் தெரியாமல் நிலைகுலைந்து போன குழந்தை மித்ராவின் பெற்றோர் `மித்ராவுக்கு உதவுங்கள்’ என சமூகவலைதளங்கள் மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் `16 லட்சம் மக்கள் ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்தால்கூட மித்ராவைக் காப்பாற்றிவிட முடியும்’ என்ற வாசகத்துடன், மித்ராவுடைய புகைப்படம் பதித்த ஃபோட்டோ ஒன்றை மித்ராவின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பகிர, அது பெரும் வைரலானது. பலரும் சிறுமி மித்ராவுக்கு நிதியுதவி அளித்ததோடு, மற்றவர்களையும் உதவுமாறு அவர்களுடைய சமூக வலைதளங்கள் மூலமாக கோரிக்கை வைத்தனர்.

ஜூன் 11-ம் தேதியிலிருந்து மித்ராவுக்கு நிதி திரட்டப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூலை 11) இரவு 10 மணியளவில் மருத்துவச் செலவுக்குத் தேவையான ரூ.16 கோடி நிதி கிடைத்துவிட்டது. இந்தச் செய்தி மித்ராவுக்காக உதவிய, பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

குழந்தை மித்ரா
குழந்தை மித்ரா

குழந்தை மித்ராவின் தந்தை சதீஷ்குமாரிடம் பேசினோம். ``எங்க குழந்தை மித்ராவோட மருத்துவச் செலவுக்கு 16 கோடி ரூபாய் ஆகும்னு சொன்னப்ப, `எப்படி அவ்ளோ பணத்தைத் திரட்டுறது, குழந்தையை நம்மால காப்பாத்திட முடியுமா’னு கலங்கிக் கிடந்தோம். பெருசா நம்பிக்கையில்லாமதான் சமூக வலைதளங்கள்ல மித்ராவுடைய பிரச்னையைச் சொல்லி நிதியுதவி கேட்டு கோரிக்கை வெச்சோம். கோரிக்கை வெச்ச சில மணி நேரத்துலேயே மித்ராவுக்காகப் பலரும் நிதி கொடுக்க ஆரம்பிச்சாங்க. சில நாள்களிலேயே கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்க, மித்ராவுக்கான முழு தொகையையும் மக்கள் மூலமாக நிச்சயமாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தது. அப்படி ஜூன் 11-ம் தேதி நிதி திரட்ட ஆரம்பிச்சு, ஜூலை 11-ல், அதாவது ஒரு மாத காலத்திலேயே மித்ராவினுடைய சிகிச்சைக்கான 16 கோடி ரூபாய் நிதியும் கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் எங்க குழந்தைக்காக நிதியுதவி அளிச்சிருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மித்ராவை தங்களுடைய குழந்தையா நினைத்து நிதி கொடுத்த, பிரார்த்தித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை. மக்களோட உதவி இல்லைன்னா நாங்க இன்னைக்கும் அழுதுகிட்டேதான் இருந்திருப்போம். `என்னோட அக்கவுன்ட்ல 32 ரூபாய்தான் இருக்கு, அதை உங்களுக்கு அனுப்பியிருக்கேன்'னு சொன்ன நபர்ல இருந்து, உண்டியலை உடைச்சு பணம் கொடுத்த குழந்தைங்க வரை மித்ராவுக்காகக் கிடைத்த உதவிகளைப் பார்த்து நெகிழ்ந்து போய்க் கிடக்குறோம்.

பெற்றோருடன் மித்ரா
பெற்றோருடன் மித்ரா

இப்ப மித்ராவுடைய சிகிச்சைக்குத் தேவையான `ஸோன்ஜென்ஸ்மா' என்னும் மருந்தை வாங்க பணம் கிடைச்சிடுச்சு. ஆனா, அந்த மருந்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மருந்தின் விலையில் 35% இந்திய அரசுக்கு வரி கட்ட வேண்டியிருக்கு. அதுக்கு 6 கோடி வரை செலவாகும். அந்த இறக்குமதி வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்யணும்னு கோரிக்கை வெச்சு பிரதமர் மோடி, மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கோம். அவங்க கொஞ்சம் கருணை காட்டுனா, குழந்தை மித்ராவுக்கான மருந்தை உடனே ஆர்டர் போட்டு வெளிநாட்டுல இருந்து வரவெச்சிடலாம். மித்ராவுக்கு கொடுக்கப்படவிருக்கும் `ஸோல்ஜென்ஸ்மா’ என்னும் மருந்து அனுப்பப்பட்டதில் இருந்து 14 நாள்களுக்குள் பயன்படுத்தியாகணுமாம். இந்த இறக்குமதி வரி சிக்கலால் மருந்து கஸ்டம்ஸ்ல நின்னுடக் கூடாதுன்னு இன்னும் மருந்துக்கு ஆர்டர் போடாம இருக்கோம். மித்ராவுக்கு 16 கோடி நிதி கிடைத்ததைப் போல், இறக்குமதி வரிக்கு மத்திய அரசிடமிருந்து விலக்கு கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில இருக்கோம்” என்றார்.

மக்கள் மித்ராவுக்கான தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்... இனி மத்திய அரசுதான் மித்ராவுக்குக் கைகொடுக்க வேண்டும்!