Published:Updated:

`ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா பாசிடிவ்!’ அதிர்ச்சியளிக்கும் தேனி நிலவரம்

கொரோனா
கொரோனா

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 16 நபர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தேனியில், கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு சொந்த ஊர் திரும்பியவர்களைக் கண்டறிந்த தேனி மாவட்ட நிர்வாகம், 24 நபர்களை கடந்த மாதம் 31ம் தேதி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அவர்களைப் பரிசோதித்ததில், 21 நபர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாகக் கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்டது.

corona
corona

தொடர்ந்து கடந்த 3ம் தேதி மேலும் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில், தேனியில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது.

முள், கட்டை, கற்களால் அடைக்கப்பட்டுள்ள தெருக்கள்! - திணறும் தேனி சுகாதாரத்துறையினர்

இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக, தேனியில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில், இன்று மாலை புதிதாக 16 நபர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக மாநில சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டது. இதனால், தேனியில் கொரோனா பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. இவர்கள், டெல்லி மாநாடு சென்று திரும்பி, கொரோனா உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த 16 நபர்களில் 12 பேர் பெண்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
`பார்த்துப் பார்த்து வளர்த்தோம்; என்ன செய்யுறதுன்னே தெரியல..!’- கலங்கும் தேனி வாழை விவசாயிகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவரது மனைவியும், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவருமான 53 வயதுப் பெண் ஒருவர், கடந்த 4ம் தேதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக கானவிலக்கு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்குக் கொரோனா தொற்று இருந்ததாகவும், அதனால்தான் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை அறிவித்தது. தேனியில், கொரோனாவிற்கு ஒரு உயிரிழப்பும், ஒரே நாளில் 16 நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும், தேனி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு