Published:Updated:

`164 ஆண்டு; முதல் ரயில்!’ -பாரம்பர்யச் சந்திப்பு நிலையமாக அறிவிக்கப்படுமா வாலாஜாபேட்டை?

வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம்
வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம்

‘‘164-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்திப் பாரம்பர்யச் சந்திப்பு நிலையமாக அறிவிக்க வேண்டும்’’ என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிக்கு அடுத்தபடியாக விண்ணளவிய கோபுரங்களும் ஆலயங்களும் தன்னகத்தேகொண்டது, வாலாஜாபேட்டை நகரம். ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும் இந்த ஊரின் அருகே உள்ள வன்னிவேடு என்ற கிராமத்தில், அகத்திய மாமுனிவர் தவமிருந்து ஈஸ்வரனை வழிபட்டதாகச் சொல்லப்படும் `அகத்தீஸ்வரர்’ கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் நினைவாக இப்பகுதியை ‘அகஸ்தீஸ்வரம்’ என்று காலம் காலமாக அழைத்ததாகவும் சொல்கிறார்கள்.

வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம்
வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம்

1754-ல் முகமது அலி என்பவர் ஆற்காட்டை ஆண்டார். இதனை ஏற்காத ஐதராபாத் நிஜாம் ஆற்காட்டின் மீது படையெடுத்தபோது முகமது அலி ஆங்கிலேயரின் உதவியை நாடினார். ஆங்கிலேயரின் படை ஐதராபாத் நிஜாமை தோற்கடித்தது. ஆங்கிலேயர்கள்தான் ‘வாலாஜா’ என்ற பட்டத்தை இந்த ஊருக்கு வைத்தனர். வாலாஜா என்றால் ‘கௌரவம் வாய்ந்தவர்’ என்று பொருள். இப்படித்தான் ஊருக்குப் பெயர் வந்தது என்கிறார்கள், வாலாஜாபேட்டை மக்கள்.

`ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து!’ - ரயில்வே அறிவிப்பு #NowAtVikatan

இந்த ஊருக்கு மற்றொரு பெருமையும் இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல் பயணிகள் ரயில் சேவை 1856 ஜூலை 1-ம் தேதி, சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. அந்த வகையில், இந்திய ரயில் வரலாற்றில் இடம் பெற்ற பெருமை வாலாஜாபேட்டைக்கு உண்டு. இது மட்டுமன்றி, நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 1866-ல் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக வாலாஜாபேட்டை நகராட்சி தொடங்கப்பட்டது.

பராமரிப்புப் பணி
பராமரிப்புப் பணி

இந்த நிலையில், பழைமையும் பெருமையும் வாய்ந்த வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம், வரும் ஜூலை 1-ம் தேதி 164-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனவே, இந்த ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டுமென்று வாலாஜாபேட்டை மக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த ரயில் பயணிகள், ``காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்புகளுக்கு மத்தியில் வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையம் இருக்கிறது. எனினும் பல ரயில்கள் இங்கு நின்று செல்வதில்லை. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், சித்தூர், சோளிங்கர், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்வி, வேலை, வியாபாரத்திற்காகப் பயணிக்கிறார்கள்.

சரக்கு ரயில்
சரக்கு ரயில்

கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் பயணிகள் அவதியடைகிறார்கள். இந்த ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பாரம்பர்ய சந்திப்பு நிலையமாக அறிவிக்க வேண்டும். அதேநேரம், ஆங்கிலேயர் காலத்தில் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது வாலாஜாபேட்டை. முதல் நகராட்சியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு