வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (04/07/2013)

கடைசி தொடர்பு:17:26 (04/07/2013)

தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் மரணம்: தண்டவாளத்தில் சடலம் கண்டெடுப்பு! (படங்கள்)

தர்மபுரி: தர்மபுரி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளவரசனின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சந்தேக மரணமாகவும் கருதப்படுகிறது.

தான் இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை என்று திவ்யா நேற்று நீதிமன்றத்தில் கூறிய நிலையிலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தண்டவாளத்தின் அருகிலிருந்து அவரது பைக் மற்றும் கைப்பை கைப்பற்றப்பட்டதோடு, அவரது சட்டை பையிலிருந்து 2 கடிதங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

144 தடை உத்தரவு

இதனிடையே இளவரசனின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தினால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த திவ்யாவும். நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 தலித் கிராமங்களில் உள்ள வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கலப்பு திருமணத்தால் நடந்தனைந்த வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா உயர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தாயாருடன் செல்ல விரும்புகிறேன் என்றும் இளவரசனுடன் இப்போது போக விரும்பவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தேன்மொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு இளவரசன் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இளவரசனின் மோட்டார் சைக்கிள், கைப் பை, சட்டைப் பையில் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காக ஒரு உயிர் பறிபோய் இருப்பது மக்களை வேதனை அடைய வைத்துள்ளது.

படங்கள்: எஸ்.ராஜாசெல்லம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க