அமைச்சர் சொன்னதை செய்ததால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தவிக்கும் அதிகாரிகள்

திருவாரூர்: அமைச்சர் சொன்னதை செய்ததால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தவிக்கிறார்கள் இரண்டு அதிகாரிகள். திருவாரூர் மாவட்டத்தில் தான் இந்த கூத்து.

திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறைக்கான காண்ட்ராக்ட் கடந்த நவம்பர் மாதம் திருச்சியில் நடந்தது. இதில், குடவாசல்-கொரடாச்சேரி-பாபநாசம் ரோடு ஆறு கோடியே அறுபத்தி ஒரு லட்சம் ரூபாய்க்கும், திருவாரூர்-மன்னார்குடி சாலையில் இருக்கும் சவளக்காரன் என்ற ஊரில் இருந்து மன்னார்குடி வரையிலான சாலை ஆறு கோடியே நாற்பத்தி மூன்று லட்ச ரூபாய்க்கும் டெண்டர் விடப்பட்டது.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தான் பதவி ஏற்று கொண்டதில் இருந்து, தனது மாவட்டத்தில் அனைத்து காண்ட்ராக்ட்களையும் தனது உறவினர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த காண்ட்ராக்ட்களையும் தனது உறவினர்களான ஆர்.ஜி.குமார் மற்றும் வீரசேகரன் ஆகியோருக்கு கொடுக்க வைத்தார். அதோடு தரணி ஹைடெக், மற்றும் டி.எம்.ஏ. இன்ப்ரா செக்டர் என்கிற கம்பெனிக்கும் கொடுத்திருந்தார். இவர்கள் அனைவருமே அமைச்சரின் நெருங்கிய உறவினர்கள். இந்த டெண்டருக்கான தொகையில் முக்கால்வாசியை அமைச்சரின் உறவினர்கள் வாங்கி விட்டார்கள்.

இந்த ரோடுகளை கடந்த 29.6.2013 அன்று சென்னை, நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். இதில் டி.எம்.ஏ. கம்பெனியும், தரணி கம்பெனியும் போட்ட ரோடுகள் தரமானதாக இருக்கிறது என்று அறிக்கை தாக்கல் செய்த அதிகாரி, அடுத்து வீரசேகரன் போட்ட ரோட்டையும், அமைச்சரின் அக்காள் மகன் ஆர்.ஜி.குமார் பேட்ட ரோட்டையும் பார்வையிட்டிருக்கிறார். இந்த இரண்டு ரோடுகளும் 50 சதவீதத்திற்கு குறைவான தரத்தோடு இருந்திருக்கிறது.

இதையடுத்து, குடவாசல் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சந்திரசேகரையும், உதவி கோட்ட பொறியாளர் அந்தோணி பிரகாஷையும் அழைத்து செம டோஸ் விட்டிருக்கிறார், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி. அதோடு '17பி-யின் கீழ் குறிப்பிட்ட இரண்டு அதிகாரிகளுக்கும், மூன்று வருடங்களுக்கு பதவி உயர்வு கிடையாது' என உத்தரவு போட்டிருக்கிறார். 'அமைச்சர் சொன்னதால செஞ்சோம் இப்படி ஒரு சிக்கல்வரும் என்பது தெரியாமால் போச்சே' என்று புலம்புகிறார்களாம் உதவி பொறியாளரும், உதவி கோட்ட பொறியாளரும்.

இந்த களேபரத்தில், காண்ட்ராக்டை எடுத்த இருவருக்கும் கடைசி பணம் இன்னும் போகவில்லை. ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான அதிகாரிகள் ஒருபுறம் புலம்பி கொண்டிருக்க, அமைச்சரோ இன்னும் ஏன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என மிரட்டி வருகிறாராம்.

வீ.மாணிக்கவாசகம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!