துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கோரி ஆட்சியரிடம் இந்து அமைப்பினர் மனு

கோவை: தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் துப்பாக்கி வைத்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர். கையில் பொம்மை துப்பாக்கியுடன் அவர்கள் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஓரு ஆண்டிற்கு மேலாக தொடர்ச்சியாக இந்து இயக்க தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக கையில் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரியும் இந்து மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (08.07.13) கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், ‘‘கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல், வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலை, நாகப்பட்டினத்தில் இந்து இயககத்தை சேர்ந்த புகழேந்தி கொலை, வேலூரில் பா.ஜ.க. மருத்துவர் அணி செயலாளர் அரவிந்த ரெட்டி கொலை என தொடர்ச்சியாக இந்து இயக்க தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதனால் தமிழகத்தில் எங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை, எனவே இந்து இயக்க தலைவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தனர்.

மேலும், காஷ்மீர், சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில் பொது மக்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதை போல, தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தியதாக கூறினர்.

ச.ஜெ.ரவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!