Published:Updated:

`16 வயதில் கராத்தே பள்ளி; பிளாக் பெல்ட் 2 டான்!' - அசத்தும் தஞ்சாவூர் மாணவன்

கராத்தே சாம்பியன் சந்தீப்
News
கராத்தே சாம்பியன் சந்தீப்

மாவட்ட அளவில் தொடங்கி சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் வரை களம் கண்டு 70-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கும் சந்தீப், 37 முறை மாநிலப் போட்டிகளிலும், 5 முறை தேசிய போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் இயங்கி வருகிறது Dragon Shito Karate School. இந்த கராத்தே பள்ளியின் நிறுவனராகவும், கராத்தே பயிற்றுவிக்கும் ஆசானாகவும் செயல்பட்டு வருகிறார் ப்ளஸ் டூ மாணவரான சந்தீப்குமார்.

பள்ளியில் கணினி அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொண்டிருக்கும் சந்தீப், ``ஒண்ணாம் வகுப்பு படிக்கும்போது கராத்தே கத்துக்க ஆரம்பிச்சேன். பள்ளிப்படிப்பும் கராத்தே பள்ளியும் எனக்கு ரெண்டு கண்கள்போல. ரெண்டையும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்கிறார். ஷிட்டோ ரியோ கராத்தே ஸ்டைலில் பிளாக் பெல்ட் 2 டான் நிலையை எட்டியிருக்கிறார் சந்தீப்.

ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தோன்றிய எண்ணத்தின் செயல்வடிவாகச் சில பள்ளிகளில் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று இலவசமாக மாணவர்களுக்கு கராத்தே பயிற்றுவித்திருக்கிறார். இவருக்கு கராத்தே மீது இருந்த அலாதியான ஆர்வத்தைப் பார்த்து வியந்துபோன அவரின் சகோதரி பவதாரணி, கராத்தே பள்ளி ஆரம்பிக்கலாம் என்ற ஐடியாவைக் கொடுத்ததோடு, வீட்டிலும் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார். அப்படியாக சந்தீப் தனது 16-வது வயதில் கராத்தே பள்ளியைத் தொடங்கி இருக்கிறார். 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் தற்காப்புக் கலையைக் கற்று வருகின்றனர்.

கராத்தே கற்றுக்கொடுக்கும் சந்தீப்
கராத்தே கற்றுக்கொடுக்கும் சந்தீப்

``என் அப்பா செந்தில்குமார்தான் என் இன்ஸ்பிரேஷன். அவரும் கராத்தேல பிளாக்பெல்ட் 6 டான் சாம்பியன்றதால என்னையும் கராத்தே வகுப்புல சேர்த்துவிட்டாரு. நானும் சேர்ந்துட்டோமேன்னு கத்துக்கிட்டு இருந்தேன். நான் 5-ம் கிளாஸ் படிக்கும்போது அப்பாவுக்கு பக்கவாதம் வந்து உடல்நிலை மோசமாயிடுச்சு. உயிரைக் காப்பாத்தலாம். ஆனா, பழையபடி அவர் நடமாடுறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப குறைவுன்னு டாக்டர் சொன்னாங்க. மூணு மாசம் ஹாஸ்பிடல்லயே இருந்தோம். மூணாவது மாசம் அப்பாவோட உடல்நிலை முன்னேற்றத்தைப் பார்த்து டாக்டர்களே ஆச்சர்யப்பட்டாங்க. `நீங்க கத்துக்கிட்ட கராத்தேதான் உங்களை மீட்டுக்கொண்டு வந்திருக்கு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதனாலதான் உங்க உடலும் மனமும் நிலையான பலத்தோடு இருந்து நீங்க மீண்டு வந்துருக்கீங்க'ன்னு மருத்துவர் எங்க அப்பாகிட்ட சொன்னபோது நான் பக்கத்துல நின்னு ஆச்சர்யமா எங்க அப்பாவையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த நாள்தான் முடிவு செஞ்சேன். என் வாழ்க்கையில கராத்தே மறுக்க முடியாத இடத்தில் இருக்கணும். என் ஆர்வத்துக்கான தொடக்கப்புள்ளியும் அதுதான்" - கராத்தேயின் மீது ஈர்ப்பு உண்டான தருணத்தைப் பகிர்ந்தார்.

கராத்தே மாணவர்களுடன் சந்தீப்
கராத்தே மாணவர்களுடன் சந்தீப்

மாவட்ட அளவில் தொடங்கி சர்வதேச அளவிலான போட்டிகள் வரை களம் கண்டு 70-க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கும் சந்தீப், 37 முறை மாநிலப் போட்டிகளிலும், 5 முறை தேசிய போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இந்தோனேசியா சென்று வந்தது தன் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்றும், அங்கு ஏற்பட்ட தோல்வி தனக்குள் விதைத்த வைராக்கியமே இன்னும் பெரிய வெற்றிகளைப் பெற வேண்டும் என்று தன்னைத் தூண்டுவதாகவும் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நான் சின்ன பையன் அதனால என்னை ஈசியா ஜெயிச்சிடலாம்னு என் காதுபடவே போட்டியில கலந்துகிட்டவங்க கேலி செஞ்சிருக்காங்க. ஆனால், அந்த வார்த்தைகளை நான் ஒருபோதும் பொருட்படுத்தினதே இல்லை. போட்டி வளையத்துக்குள்ள நிற்கும்போது போட்டியாளரோட வயதுன்றது எந்த வகையிலும் பலமோ பலவீனமோ இல்ல. நம்முடைய தன்னம்பிக்கையும் நாம கத்துக்கிட்டு இருக்கிற கலையை எவ்வளவு நுட்பமா அந்தத் தருணத்துல பயன்படுத்துறோம் என்பதும்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்" முதிர்ச்சியுடன் பேசுகிறார்.

கராத்தே சாம்பியன் சந்தீப்
கராத்தே சாம்பியன் சந்தீப்

``ஒருநாளும் கமர்க்ஷியல் நோக்கத்தோடு கராத்தேவை அணுகுனதே கிடையாது. அப்படிச் செய்யுறது அந்த மாபெரும் கலைக்கு தலைக்குனிவு. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைத் தடுக்க கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளைக் கட்டாயம் கத்துக்கணும். அது உடலுக்கு மட்டுமல்லாம மனசுக்கும் அரணா இருக்கும். நான் பள்ளிப்படிப்பை முடிச்சு காலேஜுக்குப் போனாலும் கராத்தே பள்ளியைத் தொடர்ந்து நடத்துறதுக்கு இப்பவே என் மாணவர்களுக்கு கத்துக் கொடுத்துட்டேன்" என்கிற சந்தீப்பின் வார்த்தைகளில் நம்பிக்கை தெறிக்கிறது.