Published:Updated:

`171 பேருக்கு தொற்று; அதிர்ச்சி கொடுத்த அரிசி மண்டி!’ - வேலூரைப் பதறவைத்த 12 நாள் நிலவரம்

வேலூர்
வேலூர்

‘‘ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரே கொரோனா தொற்று வெகுவேகமாகப் பரவுகிறது’’ என்கிறார், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்.

வேலூர் மாவட்டத்தில், இதுவரை 171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மே 31-ந் தேதி வரை மாவட்டத்தில் 43 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரே 12 நாள்களில் புதியதாக 128 பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சென்னையிலிருந்து வந்தவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது.

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்

காலை நேரங்களில், வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். இதனால், தொற்று பரவுதல் நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுகிறது. நேதாஜி மார்க்கெட்டில் உள்ள அரிசி மண்டி உரிமையாளர் ஒருவரின் குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடை உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி நேதாஜி மார்க்கெட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக வணிகர்களுடன் இன்று கலந்தாய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில், நாளை (14-ம் தேதி) முதல் சில மாற்றங்கள் அமலுக்குவருகின்றன. நேதாஜி மார்க்கெட்டைச் சேர்ந்த சில்லறை காய்கறி விற்பனையாளர்கள், ஏற்கெனவே பழைய மீன் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல் அந்தக் கடைகள் அனைத்தும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

வணிகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
வணிகர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கடைகள் இயங்குவதற்கு அனுமதி கிடையாது. நேதாஜி மார்க்கெட்டில் உள்ள பூ விற்பனைக் கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகளும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்படுகின்றன. நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஏற்கெனவே இயங்கிவரும் தற்காலிக உழவர் சந்தைகள், தொடர்ந்து அதே இடங்களில் செயல்படலாம். பொதுமக்கள், தேவையற்ற முறையில் மீண்டும் மீண்டும் பொருள்கள் வாங்குவதாகக் கூறிக்கொண்டு ஒன்று சேர்வதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு