ஜெயலலிதா கேட்ட காண்டாமிருகம் தற்போது கிடைக்காது: குட்டி போட்ட பின் தருகிறோம் என்கிறது அசாம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு காண்டாமிருகம் இப்போதைக்கு வராது என தெரிகிறது. கவுஹாத்தி உயிரியல் பூங்காவிலிருந்து தற்போது 6 காண்டாமிருகங்களே இருப்பதாகவும், அதன் எண்ணிக்கை 12 ஆக உயரும்போது காண்டாமிருகம் தருவதாகவும் அசாம் அரசு கூறிவிட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஒரே காண்டாமிருகம் 1989ல் இந்த உடல் நலக்குறைவால் இறந்தது. இதன்பிறகு வண்டலூர் பூங்காவில் காண்டாமிருகம் இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவிடம், பூங்காவில் காண்டாமிருகம் இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அசாம் முதல்வர் தரூண் கோகாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். "தமிழகத்திலிருந்து ஒரு ஜோடி காட்டெருதுகளை வழங்குகிறோம். பதிலாக ஒரு ஜோடி ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை தாருங்கள்" என கூறியிருந்தார்.

இதனிடையே, வண்டலூர் பூங்கா ஆய்வுக்கு வந்த வனத்துறை அமைச்சர் ஆனந்தனிடம் இது குறித்து கேட்டபோது, "கவுஹாத்தி உயிரியல் பூங்காவிலிருந்து வண்டலூருக்கு காண்டாமிருகம் தருமாறு முதல்வர் கேட்டிருக்கிறார். ஆனால், தற்போது 6 காண்டாமிருகங்களே இருப்பதாகவும், அதன் எண்ணிக்கை 12 ஆக உயரும்போது, தமிழக முதல்வரின் கோரிக்கைப்படி காண்டாமிருகம் தருவதாகவும் அசாம் அரசு கூறியுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!