`நெல்லை - பாளையங்கோட்டை நகரங்களைப் பிரிக்கும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்' என 1840-ல் அப்போதைய கலெக்டரான ஈ.பி.தாம்சன் என்பவரால் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியின்மீது கட்டப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப்போல வடிவமைக்கப்பட்ட அந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு அப்போதைய மதிப்பில் ரூ.50,000 செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பணத்தைப் பொதுமக்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்திருந்ததை அறிந்த சிரஸ்தாருக்கு நிகரான அந்தஸ்துடன் பணியாற்றிய சுலோச்சன முதலியார், தனது சொந்தப் பணத்திலேயே பாலத்தைக் கட்ட முடிவு செய்தார். அவரது கொடையின் காரணமாகக் கட்டப்பட்ட பாலத்துக்கு இப்போது வயது 177. காலங்கள் உருண்டு ஓடினாலும், இப்போதும் உறுதி குலையாமல் பயன்பாட்டில் இருக்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தனி மனிதரின் கொடையால் கட்டப்பட்ட அந்தப் பாலம் குறித்து விகடன் இணையத்தில் நேற்று (27.11.2019) செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், பாலத்தின் வரலாறு குறித்தும் தனி மனிதரான சுலோச்சன முதலியாரால் கட்டப்பட்ட பாலம் குறித்தும் இன்றைய இளைய சமூகத்துக்குத் தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தோம்.

`பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தினத்தில் பாலத்தின் மீது மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் மூலம் அதைப் பார்த்து விசாரிக்கும் மக்களுக்கு சுலோச்சன முதலியார் குறித்துத் தெரியவரும்' என்பதையும் செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இதைத் தொடர்ந்து இரவு நேரத்தில் பாலத்தில் மின் விளக்கு அலங்காரம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மின் விளக்கு வெளிச்சத்தில் பாலம் ஒளிர்ந்ததைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
177 ஆண்டுகளுக்கு முன்பே, தாமிரபரணியின் துயர் துடைத்த சுலோச்சன முதலியாரின் செயலை, எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே...!