கொரோனா தொற்று, கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு குறைந்திருந்த நிலையில், கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன; மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். தடுப்பூசி செலுத்திக்கொண்டதே தொற்று குறைவுக்கு முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது.

எனினும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது கொரோனா எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனா தொற்று அதிகமாக இல்லை என்றாலும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொற்று அதிகரிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், நுரையீரல் பாதிப்பு காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரது உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டதுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த இளம் பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்டில் கொரோனா தொற்று இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகக் கூறப்படும் நிலையிலும் கொரோனா பாதிப்பில் இளம்பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிக்குமாரிடம் பேசினோம். ’’நுரையீரல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் அபாய கட்டத்தை அடைந்த பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை காலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஏழு மணி நேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்று மாலையே அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அப்பெண்ணின் உறவினர்கள் அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகக் கூறினர்’’ என்று தெரிவித்தார்.