வைகோ ரமலான் வாழ்த்து

சென்னை: மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட சபதமேற்போம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது ரமலான் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி (ஸல்) காட்டிய வழியில் மனித வாழ்வில் நல்லறிவையும், சகிப்புத் தன்மையையும், ஆத்மா அமைதியையும், எதையும் தாங்கும் இதய வலிமையையும், மன நிம்மதியையும், இறை எண்ணத்தையும் அளித்திடும் ரமலான் மாத உண்ணா நோன்பு இருத்தலை இஸ்லாமியர்கள் நிறைவு செய்துள்ள திருநாள்தான் ஈது பெருநாள் ஆகும்.

உள்ளமெல்லாம் உவகை கொள்ளும் வகையில் ஈது பெருநாளாம் இந்த மகிழ்ச்சித் திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட சபதமேற்போம்.

இஸ்லாமியச் சகோதரர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!