புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. மீது மோசடி வழக்கு பதிவு! | Dindigul, nilakottai volume MLA Ramaswamy, puthiya thamilagam, fraud complaint, ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (18/08/2013)

கடைசி தொடர்பு:12:51 (18/08/2013)

புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. மீது மோசடி வழக்கு பதிவு!

திண்டுக்கல்: ஒப்பந்தக்காரரிடம் கமிஷன் தொகை வாங்கி ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் புதிய தமிழகத்தை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ராமசாமி மீது போலீசார் பண மோசடி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ராஜகோபாலபுரம், ஆத்துமேட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகராஜன் (44),  திண்டுக்கல் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "நான் கடந்த 20 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காராக உள்ளேன். அதன் மூலம் பல்வேறு பணிகளை எடுத்து செய்து வருகிறேன். இந்த நிலையில் நிலக்கோட்டை புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ராமசாமி எம்.எல்.ஏ.வின் தொகுதி நிதியில் இருந்து 2011-2012ஆம் நிதியாண்டிற்கு ஒப்பந்த வேலை வாங்கி தருகிறேன் என்று திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த முருகேசன் என்பவர் கூறினார்.

அதன்படி மதுரை அழகர்கோவில் மெயின்ரோடு, காதக்கிணறு, சண்முகவேல் நகரில் வசிக்கும் நிலக்கோட்டை தொகுதி ராமசாமி எம்.எல்.ஏ.விடம் என்னை முருகேசன் அறிமுகப்படுத்தினார். அப்போது தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு தொகையில் திட்டப்பணி செய்வதற்கு 22 சதவீதம் கமிஷன் தொகை தர வேண்டும் என்று ராமசாமி எம்.எல்.ஏ. கூறினார். இதைத்தொடர்ந்து ரூ.11 லட்சம் கமிஷன் தொகையில் முதலில் முன்பணமாக ரூ.1 லட்சத்தை கொடுத்தேன். பின்னர் மீதி கமிஷன் தொகை ரூ.10 லட்சத்தை கொடுத்து ஒப்பந்த வேலை சம்பந்தமான கடிதத்தை ராமசாமி எம்.எல்.ஏ.விடம் இருந்து பெற்றேன்.

அந்த கடிதத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள திட்ட அலுவலகத்தில் கொடுத்தேன். அங்கு அவர் நிதியில் இருந்து ரூ.20 லட்சம் தொகைக்கு பணி கொடுத்தனர். இதுகுறித்து ராமசாமி எம்.எல்.ஏ.விடம் கூறினேன். உடனே அவர் எனக்கு ரூ.20 லட்சம் நிதிக்கான பணி செய்வதற்கு மீண்டும் ஒரு கடிதத்தை கொடுத்தார். ஆனால் அந்த கடிதத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள திட்ட அலுவலக அதிகாரிகள் நிராகரித்தனர்.

இது தொடர்பாக ராமசாமி எம்.எல்.ஏ.விடம் கூறினேன். அதற்கு அவர் ஒரு ஆண்டுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு கூறினார். பின்பு 2013-2014ஆம் ஆண்டிற்கு உள்ள மீதமுள்ள தொகைக்கு வேலையை தரும்படி ராமசாமி எம்.எல்.ஏ.விடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த வேலையை வேறொருவருக்கு கொடுத்ததாக கூறினார். மேலும் நான் கொடுத்த ரூ.30 லட்சத்திற்கான கமிஷன் தொகையையும் திருப்பி தராமல் ராமசாமி எம்.எல்.ஏ. மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுலைமான் உசேன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராமசாமி எம்.எல்.ஏ. மீது 406, 420, 294 (பி), 506 ( 2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்