இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அங்குள்ள மக்களை நிலைகுலையசெய்துள்ளது. விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால் அங்குள்ள அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு உணவு பொருள்களுக்கு கடும் தட்டுபாடு, விலைவாசி உயர்வு, வேலையின்மை காரணமாக இலங்கை மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரதொடங்கிவிட்டனர். அதன்படி இலங்கைக்கு மிகு அருகே உள்ள தமிழகத்திற்கு அதிக அளவில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக நுழைந்து வருகின்றனர்.
இதுவரை ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் கள்ளப்படகுகள் முலம் தனுஷ்கோடிக்கு ஏற்கெனவே வந்திருந்தனர். இதுபோல் அகதிகளாக வருபவர்களை கண்காணித்து அவர்களை பத்திரமாக மீட்டு முகாமில் தங்க வைக்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நேற்று இரவு இலங்கை மன்னார்புரத்திலிருந்து ஃபைபர் படகு முலம் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் வந்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே வந்தபோது, படகின் உரிமையாளர் சுமார் 2 கிலோமீட்டருக்கு முன்னாதாகவே கடலில் அவர்களை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடலில் இரண்டு கிலோ மீட்டர் நீந்தி தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். போலீஸார் தங்களை மீட்டு அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்வார்கள் என நீண்டநேரமாக அங்கேயே காத்திருந்தனர். ஆனால் போலீஸாரோ, கடலோரக் காவல் படையினரோ அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
இதையடுத்து சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று ராமேஸ்வரம் தமிழக மீனவர்களைச் சந்தித்து முகாமிற்கு வழிகேட்டு ஆட்டோ முலம் மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். இந்த தகவல் ராமேஸ்வரம் மரைன் மற்றும் கடலோரக் காவல் படை போலீஸாருக்கு இன்று காலை தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகாமிற்குச் சென்று 9 பேரை மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ராமநாதபுரம் வந்த டி.ஜி.பி சைலேந்திரபாபு கடல்வழியாக நடந்தேறிவரும் கடத்தல் சம்பவங்களை தடுக்க கடற்கரையில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அதேநேரத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்காரணமாக தமிழகத்திற்குள் அகதிகளாக நுழையும் இலங்கை மக்களை மீட்டு முகாமில் பத்திரமாக தங்கவைக்க வேண்டும் என கடலோரப் பகுதி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆனால், அகதிகளாக தமிழகத்திற்குள் நுழைந்த 9 பேர் போலீஸார் யாரும் மீட்காத நிலையில், தாங்களாகவே விசாரித்து அகதிகள் முகாமிற்குச் சென்றது, போலீஸார் தங்கள் பணிகளை சரிவர செய்வதில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும், இதுபோல் அலட்சியமாக பணியாற்றும் போலீஸார் எப்படி கடல்வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்துவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.