Published:Updated:

சத்தியமங்கலம் வனப்பகுதி: யானைகள் தாக்கி 25 நாள்களில் 2 விவசாயிகள் பலி... மக்கள் அச்சம்!

2 விவசாயிகள் பலி

காட்டு யானைகள் தாக்கி 25 நாள்களில் 2 விவசாயிகள் பலியான சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சத்தியமங்கலம் வனப்பகுதி: யானைகள் தாக்கி 25 நாள்களில் 2 விவசாயிகள் பலி... மக்கள் அச்சம்!

காட்டு யானைகள் தாக்கி 25 நாள்களில் 2 விவசாயிகள் பலியான சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
2 விவசாயிகள் பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர் அருகே கரளயம் ஏலஞ்சிபுதூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (52). விவசாயியான இவர் அறுவடைக்கு இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் கடம்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட குன்றி பகுதியில் உள்ள தோட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்வதற்காக இயந்திரத்துடன் சென்றார். அந்தப் பணியை முடித்துவிட்டு, இயந்திரத்தின் ஓட்டுநரான எக்கத்தூர் போலேகவுடனூரைச் சேர்ந்த நாகேஷ் என்பவருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மோட்டார் பைக்கை நாகேஷ் ஓட்டி வர, பழனிசாமி பின்னால் அமர்ந்து வந்தார். வனப்பகுதியான அஞ்சனை பிரிவு பகுதியில் வரும்போது திடீரென புதர் மறைவில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலைக்கு வந்தது. இதைக் கண்டதும் அலறியடித்துக் கொண்டு மோட்டார் பைக்கை அப்படியே போட்டு விட்டு இருவரும் இறங்கி ஓடினர். அப்போது எதிரே மற்றொரு புதரில் இருந்து வெளியேறிய வேறொரு யானை பழனிசாமியை துரத்தியது. உயிர்தப்புவதற்காக ஓடிய பழனிசாமியை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்தது. இதில் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பழனிசாமி உயிரிழந்தார். நாகேஷ் காட்டுக்குள் ஓடி உயிர் தப்பினார்.

2 யானைகளும் அங்கிருந்து சென்ற பிறகு வெளியேறிய நாகேஷ் ஊருக்குள் சென்று நடந்ததை கூறியதுடன், கடம்பூர் போலீஸாருக்கும், வனச்சரகருக்கும் தகவல் அளித்தார். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் பழனிசாமியின் சடலத்தை மீட்டனர். பழனிசாமியின் ஈமச்சடங்குக்கு வனத்துறை சார்பில் ரூ.50,000 உடனடியாக வழங்கப்பட்டது.

உயிரிழந்த பழனிசாமி
உயிரிழந்த பழனிசாமி

கடந்த 10-ம் தேதி நள்ளிரவு சத்தியமங்கலம் வனச்சரகத்துக்குட்பட்ட ராமபைலூர் கிராமத்தில் வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த அம்மாசைக்குட்டி (60) என்ற விவசாயியை தும்பிக்கையால் தூக்கிப்போட்டு, அவரது கால்களை மிதித்தது. இதில் படுகாயமுற்ற அம்மாசைக்குட்டி கோவை தனியார் மருத்துவமனையில் 1 வாரம் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 25 நாள்களில் அடுத்தடுத்து 2 விவசாயிகள் காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த அம்மாசைக்குட்டி
உயிரிழந்த அம்மாசைக்குட்டி

இந்த நிலையில், இறந்தவர்களில் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படுமா என சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநர் கிருபாகரிடம் பேசினோம். ``காட்டுயானை தாக்கி பலியான விவசாயிகளின் ஈமக்கிரியை சடங்குக்காக உடனடியாக ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர வனத்துறை சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர்களது குடும்பத்துக்கு வந்து சேரும். கடம்பூர், குன்றிக்குச் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் யானைகள் நடமாட்டம் பகல் பொழுதிலேயே அதிகரித்து காணப்படும். எனவே, இந்தச் சாலையில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.