Published:Updated:

ரேஷனில் பொங்கல் பரிசு வாங்கச் செல்ல முடியாத மூதாட்டி... வண்டியில் இழுத்துச் சென்ற சிறுவர்கள்!

சிறுவர்கள்
சிறுவர்கள்

சிறுவர்களின் உதவியைச் சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி கண்ணீருடன் அவர்களுக்கு நன்றி கூறினார். ரேஷன் கடைக்கு வந்த பெண்கள், பொதுமக்களும் சிறுவர்களின் செயலைப் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர், 70 வயதாகும் மூதாட்டி சுப்புலட்சுமி. தனியாக வசித்து வரும் சுப்புலட்சுமிக்கு அவரின் மகள் அவ்வப்போது உதவிகளைச் செய்து வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் வெளியே எங்கேயும் செல்லாதபடி சுப்புலட்சுமி வீட்டுக்குள்ளே முடங்கிவிட்டார். அவரின் மகள்தான் அவருக்கு ரேஷன் பொருள்களை வாங்கிக்கொடுத்து வந்துள்ளார்.

சிறுவர்கள்
சிறுவர்கள்

தற்போது தமிழக அரசின் சார்பில் ரூ.2,500 உடன் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அவரின் மகளால் வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. சுப்புலட்சுமி நேரில் சென்றுதான் வாங்க வேண்டிய கட்டாயம். வேறு வழியின்றி மகளின் உதவியோடு, 1 கி.மீ தூரமுள்ள ரேஷன் கடைக்குச் சிரமப்பட்டுச் சென்றிருக்கிறார். பாதி தூரம் நடந்துசென்ற அவரால், அதன் பிறகு, ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.

சோர்வடைந்த மூதாட்டி மயக்கத்தில் அங்கிருந்த மர நிழலில் படுத்துவிட்டார். இதற்கிடையே, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணியின் மகன்களான நிதின், நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் மூதாட்டிக்கு உதவ முன்வந்தனர். தங்கள் வீட்டிலிருந்து, இருசக்கர வாகனத்தில் பொருத்தி இழுத்துச் செல்லப் பயன்படுத்தும் இழுவை வண்டியை எடுத்து வந்த அவர்கள், பாட்டியின் மகள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு அந்த வண்டியில் மூதாட்டியை படுக்க வைத்தனர்.

அவரை வண்டியில் வைத்து இழுத்துச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க வைத்து, மீண்டும் அந்த இழுவை வண்டியில் அவரை வைத்துத் தள்ளிக்கொண்டு வந்து வீடு சேர்த்தனர். சிறுவர்களின் உதவியைச் சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி கண்ணீருடன் அவர்களுக்கு நன்றி கூறினார். ரேஷன் கடைக்கு வந்த பெண்கள், பொதுமக்களும் சிறுவர்களின் செயலைப் பாராட்டினர்.

இதுபற்றி சிறுவர்களிடம் பேசினோம். ``சைக்கிள்ல கடைக்குப் போயிட்டு வந்துக்கிட்டு இருந்தோம். அப்பதான் பாட்டி நடக்க முடியாம மர நிழல்ல மயக்கமா கிடந்ததைப் பார்த்தோம். எங்க வீட்டு வழியாத்தான் அந்தப் பாட்டி வீட்டுக்குப் போவணும். எங்க போவணும்னு கேட்டா, ரேஷன் கடைக்குப் போயிட்டு, வீட்டுக்குப் போவணும்னு சொன்னாங்க. டூவீலர்ல வெச்சு பாட்டிய கூட்டிக்கிட்டுப் போக முடியாது. அப்பத்தான், வீட்டுல இருக்கும் அந்த வண்டி ஞாபகம் வந்திச்சு. உடனே ரெண்டு பேரும் அப்பாகிட்ட இதுபத்தி சொல்லி, வண்டியை எடுத்துக்க பர்மிஷன் கேட்டோம்.

மூதாட்டியை அழைத்துச் செல்லும் சிறுவர்கள்
மூதாட்டியை அழைத்துச் செல்லும் சிறுவர்கள்

அவரும் எடுத்துக்கச் சொல்லிட்டு, பத்திரமா போயிட்டு பத்திரமா வந்துடணும்னு சொல்லி அனுப்புனாரு. உடனே எடுத்துக்கிட்டு கிளம்பினோம்.

மொதல்ல யாரும் ஹெல்ப்புக்கு வரலை. பாட்டிய ஏத்தப்போற நேரத்தில சிலர் ஹெல்ப் பண்ணாங்க. பாட்டியைத் தூக்கி வண்டியில படுக்க வெச்சோம். ரேஷன் கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போய், பொருள் வாங்கிட்டு தள்ளிக்கிட்டு வந்து அவங்க வீட்டிலேயே விட்டுட்டோம். எல்லாரும் பாராட்டுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றனர் கொஞ்சம் கூச்சம் கலந்த புன்னகையுடன்.

நேயத்தின் ரேகை ஓடும் பிஞ்சுக் கைகளுக்கு வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு