Published:Updated:

`ஹோம் மேட் சாராயமும் சயின்ஸ்தான் சார்! ' -கடலூர் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்

குக்கர் சாராயம்
குக்கர் சாராயம்

கடலூர் மாவட்டத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மேலும் இருவரை காவல்துறை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது.

கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மார்ச் 24-ம் தேதி தொடங்கி மே 17-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நாள்களில் மருந்துகள், மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் அடைக்க அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.

கைது செய்யப்பட்ட பெருமாள், செல்வம்
கைது செய்யப்பட்ட பெருமாள், செல்வம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். மாற்று போதைக்காக சானிடைஸர் குடித்து கோவை இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கடலூரில் எத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்தனர்.

மது கிடைக்காத விரக்தியில் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது தமிழகக் காவல்துறை. அதையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் கள்ளத்தனமாக காய்ச்சப்படும் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகிறது காவல்துறை.

நேற்று முன்தினம் கடலூர் முதுநகரை அடுத்திருக்கும் வடுகப்பாளையம் பகுதியில் வசிக்கும் சிலர், வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக போலீஸுக்குத் தகவல் வந்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், வீட்டுக்குள் குக்கரில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த மணிகண்டன், ரஜினி ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், அவர்கள் வைத்திருந்த சாராய ஊறலையும் அழித்தனர்.

`வீடியோ பார்த்து கத்துகிட்டு சாராயம் காய்ச்சினோம்!’ -  மதுரையில் சிக்கிய இளைஞர்கள்

இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து மதுவிலக்கு போலீஸார் அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது பெருமாள், செல்வம் என்ற இருவர் தங்களது தோட்டத்திலேயே குக்கரில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. உடனடியாக அவர்களைக் கைது செய்த போலீஸார், சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் ஊறல் மற்றும் 3 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றி அழித்தனர்.

குக்கர்
குக்கர்

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ``ஊரடங்கு நேரத்தில் சரக்குக்கு டிமாண்ட் வந்துடுச்சி. அப்படியே கிடைச்சாலும் சுமாரான சரக்கே ஆயிரக்கணக்குல விலை வச்சி விக்குறானுங்க. அதனால இப்படி வீட்டுலயே காய்ச்சினால் தரமானதாவும், டேஸ்டாவும் இருக்கும். எல்லாமே சயின்ஸ்தான் சார். இந்த நேரத்துல `ஹோம் மேட்’ சாராயத்துக்கு மவுசு அதிகரிச்சிருக்கு. அதனால எங்கள் தேவைக்குப் போக மீதியை விற்கவும் செய்தோம்” என்று கூறி போலீஸையே தெறிக்க வைத்தார்களாம்.

அடுத்த கட்டுரைக்கு