Published:Updated:

கடலூர்: முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா!

கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே கொரோனா பாசிட்டிவ் தகவல் தெரியவந்து, கடைசி நேரத்தில் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.25.54 கோடி மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, ரூ.32.16 கோடி மதிப்பிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை, எளிய பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கடலூரில் அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகள், தொழிற் கூட்டமைப்பினர் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டத்தை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவரிடம், `எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக இ-பாஸ் முறை தொடர்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனவே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு, ``இப்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. எந்தப் பிரச்னையும் இல்லை. இருப்பினும் அத்தியாவசியத் தேவையிருந்தால் மட்டும் விண்ணப்பிக்கலாம், ஏனெனில், இது ஒரு கொடிய நோய், உலகத்தையே ஆட்டிப்படைக்கிறது. பொதுமக்களை பாதுகாக்கவே இந்தக் கட்டுப்பாடுகள். கொரோனா நோயாளிகளின் தொடர்பைக் கண்டறியவே இதைத் தற்போதும் வைத்திருக்கிறேன்’’ என்று முதல்வர் பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ``கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் முறைகேடு நடந்திருப்பதாக இதுவரை புகார் ஏதும் வரவில்லை. அப்படியிருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை நிச்சயமாக இருக்கும். கடலூர் மாவட்டத்தில் நிறைய திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். அ.தி.மு.க ஆட்சியில்தான் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இன்னமும் பல திட்டங்களை அறிவித்திருக்கிறோம். அது ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வரும்போது வளர்ச்சியும் இருக்கும்’’ என்றார்.

வரவேற்பு பேனர்கள்
வரவேற்பு பேனர்கள்

இதையடுத்து, ``வாக்கு வங்கிக்காக அரியர்ஸ் தேர்வு எழுத பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளீர்களா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,``கேள்வியே தவறானது. இது தேவையில்லாதது. கொரோனா எனும் கொடிய சூழலில் மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும்விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஜூலை மாதமே பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போது கடிதம் எழுதியிருக்கிறார். `கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம்’ என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதுவரை ரத்து செய்ய வேண்டும். வரும் 29-ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து படிப்படியாகத் திறக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வருவதும், வராததும் அவர்களின் விருப்பம். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. இது தவறான குற்றச்சாட்டு. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. கடலூரில் 39 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.

எல்.முருகனை ஆட்டிவிக்கும் இருவர்; பன்னீருக்கு எதிராக எடப்பாடி வியூகம்..! கழுகார் அப்டேட்ஸ்

கடலூருக்கு முதல்வர் இன்று வருவதையொட்டி, கூட்டத்தில் பங்கேற்கும் செய்தியாளர்கள் 20 பேருக்கு நேற்று முன்தினமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவுகள் நேற்று இரவு வரை வராதநிலையில், செய்தியாளர்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செய்தியாளர்கள் வந்தனர்.

வரவேற்பு பேனர்கள்
வரவேற்பு பேனர்கள்

அப்போது, கொரோனா பரிசோதனை முடிவுகளில் செய்தியாளர்கள் இருவருக்கு பாசிட்டிவ் என வந்திருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இரண்டு நாள்களுக்கு முன்பே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், அதன் முடிவுகளைத் தெரிந்துகொண்டு செய்தியாளர்களை அனுமதித்திருக்கலாம். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தாலேயே கொரோனா பாசிட்டிவ் தகவல் தெரியவந்து கடைசி நேரத்தில் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதேபோல், கடலூருக்கு முதல்வர் வருகையை ஒட்டி சாலை ஓரங்களில் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவித முன் அனுமதியும் வாங்காமல் அ.தி.மு.க-வினர் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்த கட்டுரைக்கு