Published:Updated:

`தரைமட்டமான 2 மாடி கட்டடம்; அபயக்குரல் எழுப்பிய இளைஞர்!’- திடுக்கிட்ட அரக்கோணம் மக்கள்

தரைமட்டமான 2 மாடி வீட்டுக் கட்டடம்
தரைமட்டமான 2 மாடி வீட்டுக் கட்டடம்

அரக்கோணம் அருகே கனமழைக்கு இரண்டு மாடி வீட்டுக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இளைஞர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார். 

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசிப்பவர் கணேஷ். இவரின் மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்குச் சொந்தமான, அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஆயர்பாடி கிராமத்தில், இரண்டு மாடி வீட்டுக் கட்டடம் உள்ளது. இதில், சேகர் என்பவர் தன் மனைவி ஈஸ்வரி, மகன் நரேஷுடன் (26) மேல் தளத்தில் வாடகைக்கு இருந்தார். 

மீட்புப் பணி
மீட்புப் பணி

கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழைக்கு, இந்த அடுக்குமாடி வீடு தளர்ந்திருந்தது. இதை அவர்கள் கவனிக்கவில்லை. இந்த நிலையில், சேகரும், அவரின் மனைவியும் வெளியூர் சென்றனர். மகன் நரேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இடைவிடாமல் பெய்த கனமழை அதிகாலை வரை நீடித்தது.

வீட்டுப் படுக்கை அறையில் நரேஷ் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென இரண்டு மாடிக் கட்டடமும் இடிந்துவிழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கிய நரேஷ் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார். வீடு இடிந்த அதிர்வை உணர்ந்த அக்கம், பக்கத்தினர் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்தனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

அபயக்குரல் எழுப்பிய நரேஷை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அது முடியாமல் போனதால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்துவந்து நரேஷை உயிருடன் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து, நெமிலி வருவாய்த் துறையினரும், அவலூர் காவல் துறையினரும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் உயிர்ச் சேதமோ, சட்டம்-ஒழுங்கு பாதிப்போ இல்லை என ஆயர்பாடி கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி கூறியிருக்கிறார்.

தரைமட்டமான வீடு
தரைமட்டமான வீடு

வேலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்துவருகிறது. இரண்டு நாள்களில், இடைவிடாமல் பெய்த கனமழைக்கு மாவட்டம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்திருப்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினர்.

அடுத்த கட்டுரைக்கு