Published:Updated:

திருச்சி அருகே 26 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவன்! - மீட்புப் பணிகள் தீவிரம்

திருச்சி அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மீட்கும் பணியில் தீவிரம்.

சிறுவன்
சிறுவன்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெக்டோ ஆரோக்கியராஜ் மற்றும் கலாராணி தம்பதியர். இவர்களின் 2 வயது மகன் சுஜித் வில்சன் என்பவர், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென குழந்தை சுஜித் வில்சனைக் காணவில்லை எனப் பெற்றோர்கள் தேடியபோது, அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. பதறிய பெற்றோர் கதறி அழவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்க முயற்சி எடுத்தனர். ஆனாலும், 26 அடி ஆழம் கொண்ட பழைய கேட்பாரற்றுக் கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தை சுஜித் வில்சனை வெளியே எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

போலீஸ்
போலீஸ்

அடுத்து தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தை சுஜித் வில்சனை பத்திரமாக மீட்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள். குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பதற்றத்தோடு அப்பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது.