Published:Updated:

14 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் மீட்புப் பணி: பேரிடர் மீட்புக் குழுவினர் விரைவு! #SaveSujith

மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 14 மணி நேரத்துக்கு மேலாக நடந்து வருகிறது.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காலை 8 மணிக்குள் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை 68 அடிக்கு கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலாராணி தம்பதி. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த இவர்களின் 2 வயது மகன் சுஜித் வில்சனைக் காணாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தது தெரியவந்தது. பெற்றோரின் கதறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்தனர். 26 அடி ஆழம் கொண்ட பழைய ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தையை அவர்களால் மீட்க முடியவில்லை.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தை சுஜித் வில்சனைப் பத்திரமாக மீட்பதற்கு முயற்சி எடுத்துவருகிறார்கள்.

திருச்சி அருகே 26 அடி ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவன்! - மீட்புப் பணிகள் தீவிரம்

இதுகுறித்துப் பேசிய தீயணைப்புத் துறையினர், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை சுவாசிக்கப் போதுமான ஆக்சிஜன் இருப்பதால், குழந்தை நல்ல நிலையில் உள்ளது. குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்கும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு சார்பில் செய்துதரப்படும். மருத்துவக் குழு, சம்பவ இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்து, உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. குழந்தையை மீட்க மதுரையிலிருந்து சிறப்புக் கருவிகள் கொண்டுக்வரப்படுகிறது” என்றார். குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்துக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விரைந்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தையை கயிற்றைக் கட்டி மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் மணிக்கட்டில் கயிறு கட்டி வெளியே எடுக்க முடிவு செய்துள்ளனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்தது. கீழே பாறைகள் இருந்ததால் அந்தப் பணி தாமதம் ஏற்பட்டது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

மதுரையைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த ரோபோ கருவி வந்துள்ளது. கயிறு மூலம் கட்டப்பட்ட கேமராவை உள்ளே இறக்கி, குழந்தை என்ன நிலையில் இருக்கிறது என்பதைக் கண்காணித்தனர். தற்போது ரோபோ கருவியை உள்ளே இறக்கியுள்ளனர். மீட்புப்பணி ஒருபுறம் நடந்துவரும் நிலையில் குழந்தைக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அவரது தந்தை பேசி வருகிறார்.

குழந்தை சுஜித் வில்சனிடம் தந்தை பிரிட்டோ மற்றும் உறவினர்கள் மூலம் பேச்சுக்கொடுக்கப்பட்டது. அதற்குக் குழந்தை பதிலளித்ததாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சுவாசம் சீராக இருக்க அந்தக் குழிக்குள் செயற்கை முறையில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறப்புக் கருவி மூலம் குழிக்குள் இறக்கப்பட்ட கயிறு, குழந்தையின் ஒரு கையில் கட்டப்பட்டது. மற்றொரு கையிலும் கயிறு கட்டப்பட்டவுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்தனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்க வேண்டும் ட்விட்டரில் #SaveSujith என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் பிரார்த்தனையை முன்னெடுத்துள்ளனர். குழந்தையின் இரண்டாவது கையிலும் கயிறு கட்டப்பட்டு குழந்தை விரைவில் மீட்கப்படும் என்று மீட்புப் படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குழந்தையைமீட்கும் பணியில் தொடக்கம் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்தில் இருந்து நேரிடையாகப் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியை மிகவும் கவனமாக செய்துவருகிறோம். குழந்தையை பத்திரமாக மீட்க முழு முயற்சி எடுத்து வருகிறோம்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

குழந்தையின் கைகளில் கயிறு கட்டி மீட்க மூன்று முறை முயற்சி செய்தோம். ஆனால், ஒரு கையில் கட்டியிருந்த கயிறு நழுவியது. அதேநேரம், மேலும் தாமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆழ்துளைக் கிணற்றின் அருகில் குழி தோண்டும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறோம். குழந்தையின் ஒரு கையில் கயிறு கட்டப்பட்டிருப்பதால், அருகில் மற்றொரு குழி தோண்டினாலும் குழந்தை அதனால் பாதிக்கப்படாது. குழந்தையின் ஒரு கையில் கட்டப்பட்டிருக்கும் கயிறு குழந்தை அதே இடத்தில் இருக்க உதவும். குழந்தையை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்’’ என்றார். மதுரை மணிகண்டன் குழுவினர், பல்லடம் `Rescue Robo' குழுவினர் மற்றும் மற்றொரு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாதநிலையில், நாமக்கல்லை சேர்ந்த நான்காவது குழுவினர் மீட்புப் பணிகளில் இணைந்திருக்கிறார்கள். அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுடன் அவர்கள் மீட்புப் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

இதனால், ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் குழி தோண்டும் பணியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. குழந்தை ஏற்கெனவே இருந்த இடத்தில் இருந்து மேலும் 5 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 2 மணிக்கு மேல் குழந்தையை மீண்டும் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தையின் ஒரு கையில் கட்டப்பட்டிருந்த கயிறும் நழுவியது. இதனால், 30 அடியில் இருந்த குழந்தை 60 அடிக்கும் மேல் ஆழத்துக்குச் சென்றது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்திருக்கிறது.