Published:Updated:

`ஒரே நாளில் வீடு திரும்பிய 20 பேர்!’ - ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட #corona அப்டேட்

குணமடைந்தவர்களை வரவேற்ற ராணிப்பேட்டை கலெக்டர்
குணமடைந்தவர்களை வரவேற்ற ராணிப்பேட்டை கலெக்டர்

ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 20 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், ஏற்கெனவே ஒருவர் குணமடைந்த நிலையில் 33 பேர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மீதமுள்ள 5 பேர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேல்விஷாரம், பாணாவரம், கல்மேல்குப்பம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, அம்மூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 பேர் கொரோனாவிலிருந்து பூர்ணமாக விடுபட்டு குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களை வரவேற்ற திருப்பத்தூர் கலெக்டர்
குணமடைந்தவர்களை வரவேற்ற திருப்பத்தூர் கலெக்டர்

முழு பரிசோதனைக்குப் பிறகு இன்று வீடு திரும்பிய அவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் கைதட்டி கரவோசை எழுப்பி வழியனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸுகள் மூலம் மேல்விஷாரம் அழைத்துவரப்பட்ட 15 பேரையும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, எஸ்.பி மயில்வாகனன், சப்-கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் பூங்கொத்து, கூடை நிறையப் பழங்களைக் கொடுத்து வரவேற்றனர். பின்னர், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 17 பேரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 5 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இவர்களும் இன்று வீடு திரும்பினர். இதனிடையே, ஆம்பூர் மஸ்ரு உலும் மேல்நிலைப் பள்ளியில் 5 பேரையும் பழக்கூடைகளைக் கொடுத்துத் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

பரிசோதனை செய்துகொண்ட அமைச்சர் வீரமணி
பரிசோதனை செய்துகொண்ட அமைச்சர் வீரமணி

அடுத்த 14 நாள்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி அவரவர் வீடுகளுக்கு ஆம்புலன்ஸ் மூலமாகவே அனுப்பி வைத்தனர். முன்னதாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சிவன் அருள், எஸ்.பி விஜயகுமார் ஆகிய மூவரும் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பதை உறுதி செய்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு