வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (23/11/2013)

கடைசி தொடர்பு:15:49 (23/11/2013)

அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் இன்சுலின்: டீன் தகவல்!

சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குறைந்த விலையில் இன்சுலின் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆளாகின்றனர். சமீப காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இன்சுலினும், பெரியவர்களுக்கு மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.

இன்சுலின் விலை அதிகமாக இருப்பதால், பெரியவர்களுக்கு இலவசமாக வழங்காமல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனால், ஏழை நீரிழிவு நோயாளிகள் பணம் கொடுத்து வாங்கி உபயோகிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

இது குறித்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் கூறும்போது, ''சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதிக விலை கொடுத்து இன்சுலின் மருந்து வாங்க முடியாமல் அவதிப்படும் ஏழைகளுக்காக அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் இன்சூலின் விற்பனை செய்யப்பட உள்ளது. இது வெளி மார்க்கெட் விற்பனை விலையைவிட, மூன்றில் ஒரு பகுதிதான் இருக்கும். 100 ரூபாய் மதிப்புள்ள இன்சுலின், அரசு மருத்துவமனையில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இதற்காக, தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் 2 கவுண்டர்கள் திறக்கப்பட்டு இன்சுலின் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு, நான்கு வகையான இன்சுலின் விற்பனை செய்யப்படும்.

இதேபோல், விலை உயர்ந்த 4 வகையான சிறுநீரக மாத்திரைகளையும் அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையும், தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வாங்கி பயன் பெறலாம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்