பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன் | Perarivalan including should be released: Thirumavalavan request!

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (25/11/2013)

கடைசி தொடர்பு:17:22 (25/11/2013)

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன்

சேலம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலத்தில் நிருபர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ''முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

ராஜீவ் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனிடம் வாக்கு மூலம் பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. முன்னாள் அதிகாரியின் பேட்டி, பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரின் தண்டனையை ரத்து செய்வதுடன், அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் ஆலோசனை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளோம்.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் இந்திய அரசு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற உள்ளது. அதற்குள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை தொடங்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் இயற்ற வேண்டும். இதில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாடாளுமன்ற தீர்மானத்துக்காக பிரதமரை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் மனு அளிக்கும்.

ஏற்காடு தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் தி.மு.க. வேட்பாளர் மாறனுக்கே கிடைக்கும். இந்த தேர்தல் நடுநிலையுடன் நடத்தப்பட்டால் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.

வருகின்ற 27 ஆம் தேதி உலககெங்கும் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் கடைப்பிடிக்க உள்ளனர். சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதை லட்சியமாகக் கொண்டு அதற்கு உறுதி ஏற்கும் நாளாக இந்த ஆண்டு மாவீரர் நாளைக் கடைப்பிடிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்