எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு சம உரிமை: ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை: "எய்ட்ஸ் தொற்றுள்ளவரை பரிவுடன் அரவணைத்து சம உரிமை அளிக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் ‘உலக எய்ட்ஸ் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத, புறக்கணித்தல் இல்லாத மற்றும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லாத நிலையை ஏற்படுத்துதல்” என்பதாகும்.

தமிழகத்தில் எச்.ஐ.வி. நோயை கண்டறிய 1,471 நம்பிக்கை மையங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 52 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 116 இணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் 16 சட்ட உதவி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவையாவும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லா நிலையை எட்ட தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை செயல்படுத்தும் விதமாக, எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ஆண்டுதோறும் நிதியுதவியும், எச்.ஐ.வி தொற்றுள்ளோர் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவ மனைக்குச் சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியமும் எனது தலைமையிலான அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்பை தளர்த்தி ஓய்வூதியமும், எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொற்றுகளைத் தவிர்ப்பதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதால் தமிழகத்திலுள்ள 10,784 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 13 முதல் 18 வயதுடைய வளரிளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2,387 செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தாயிடமிருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் இருப்பதற்காக புதிய மருந்துகள் சென்ற ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் நோயை தடுக்க அனைவரும் தன்னார்வ ரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என்றும், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!