Published:Updated:

`கிராமத்தின் தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்!’ - பஞ்சாயத்து தலைவரான 22 வயது ஸாருகலா

``கிராமத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டேன். கிராமத்தின் தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்'' என்று பொறியியல் மாணவி தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் போட்டியிட்டனர். வழக்கமாக அரசியல் கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பதிலாக, இந்த முறை நிறைய புதுமுக வேட்பாளர்கள் போட்டியிட முன்வந்திருந்தனர்.

தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்கு உள்பட்ட வெங்காடம்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவருக்கான தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ரேவதி முத்துவடிவு, தங்கசக்திகனி, மணிமேகலா, மகேஸ்வரி ஆகியோருடன் போட்டியிட்ட ஸாருகலா வெற்றியைக் கைப்பற்றியுள்ளார்.

வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’-கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரிப் பெண்

பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஸாருகலா, பொறியியல் பட்டதாரி. 22 வயது நிரம்பிய அவர் பட்ட மேற்படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அவரின் தந்தை ரவிசுப்பிரமணியன் தொழிலதிபர். தாய் சாந்தி ஆசிரியை. தம்பி அழகுசந்துரு +2 படித்துள்ளார்.

வெற்றியைக் கைப்பற்றிய ஸாருகலாவிடம் பேசினோம். ``எனக்குச் சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் அதிகம். என் தந்தை ரவிசுப்பிரமணியன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை. இந்த முறை இந்தப் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் என்னைப் போட்டியிடுமாறு பெற்றோர் சொன்னதும் சம்மதித்தேன்.

தேர்தலில் எல்லோரையும் போலவே நானும் பிரசாரம் செய்தேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. எங்கள் பஞ்சாயத்தில் 23 சிறிய கிராமங்கள் இருக்கின்றன. அனைத்து கிராமங்களிலுமே குடிநீர் பிரச்னை உள்ளது. அதைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன்.

பேருந்தில் வாக்கு சேகரித்த ஸாருகலா
பேருந்தில் வாக்கு சேகரித்த ஸாருகலா

குற்றாலம் சீசன் சமயத்தில் கிடைக்கும் தண்ணீர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கோவிலான்குளம் வரை வருகிறது. அந்தத் தண்ணீரை எங்கள் பகுதிக்கும் கொண்டுவர அதிகாரிகளிடம் பேசி திட்டம் மேற்கொள்ளப்படும். அதன் மூலம் குற்றாலம் சீசன் சமயத்தில் கிடைக்கும் தண்ணீரை குடிநீர் தேவைக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அரசு சார்பாகக் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மூடியே கிடக்கின்றன. அவற்றை திறக்கவும் அதன் மூலம் மாணவர்களுக்குப் பலன் கிடைக்கவும் ஏற்பாடு செய்வேன். அதேபோல பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் குடிநீர்த் தொட்டிகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெற்றிக் கொண்டாட்டம்
வெற்றிக் கொண்டாட்டம்

மக்களின் அடிப்படைத் தேவைகளான தரமான சாலை வசதி, வடிகால் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கல்லூரியில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் நலனுக்குப் பாடுபடுவேன்” என்றார்.

கிராம பஞ்சாயத்துத் தலைவருக்கு 5 பேர் போட்டியிட்ட நிலையில், ஸாருகலாவுக்கு 3,336 வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்ததாக வந்த ரேவதி முத்துவடிவு என்பவர் 2,540 வாக்குகள் பெற்றார். அதனால் 796 வாக்குகள் வித்தியாசத்தில் பொறியியல் பட்டதாரி ஸாருகலா வெற்றிபெற்றார்.

வெற்றி பெற்ற பொறியியல் மாணவி ஸாருகலா
வெற்றி பெற்ற பொறியியல் மாணவி ஸாருகலா
மாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்; ஓட்டுக்கேட்டு ஜெயிக்க வைத்த வி.ஐ.பி-க்கள்!

வெங்காடம்பட்டி கிராமத்தில், `வாக்காளர்கள் யாருக்கும் பணமோ மதுவோ கொடுக்க மாட்டேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அடைப்பேன்’ என வாக்குறுதி அளித்துப் போட்டியிட்ட காந்தியவாதி வேட்பாளரான மணிமேகலாவுக்கு 334 வாக்குகள் கிடைத்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு