ஆதித்யா செயற்கைகோள் 4 ஆண்டுகளில் விண்ணில் பாயும்: மயில்சாமி அண்ணாதுரை! | Aditya satellite will be launched in 4 years: Mayilsami Annadurai!

வெளியிடப்பட்ட நேரம்: 19:24 (04/01/2014)

கடைசி தொடர்பு:19:24 (04/01/2014)

ஆதித்யா செயற்கைகோள் 4 ஆண்டுகளில் விண்ணில் பாயும்: மயில்சாமி அண்ணாதுரை!

திருப்பூர்: சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ள ஆதித்யா செயற்கைகோள்  4 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

மங்கள்யானைத் தொடர்ந்து சூரியனைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள உள்ள ஆதித்யா செயற்கைகோள் திட்ட பணிகள் இன்னும் நான்கு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் திட்டக்குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாத்துரை  தெரிவித்தார்.

திருப்பூர், அருள்புரத்தில் உள்ள தனியார் மேல்நிலையில் பள்ளியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில், ஆரியபட்டாவில் தொடங்கி மங்கள்யான் வரை இந்திய செயற்கைகோள் மாதிரிகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதை ஏராளமான பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
 
மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் பேசும்போது, ''சூரியன் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக புதிய வடிவமைப்புடன் கூடிய செயற்கைகோளை உருவாக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. பூமியைவிட சூரியன் 8 மடங்கு வெப்பம் கொண்ட கிரகமாகும். எனவே, வெப்பத்தை தாங்க கூடிய வகையில் உலோக கலவையிலான தகடுகளால் செயற்கைகோள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த திட்டப் பணிகள் நிறைவடைந்து இன்னும் 4 ஆண்டுகளில் ஆதித்யா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா வெற்றிகரமாக செலுத்தப்பட்டால், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சூரியனை ஆய்வு மேற்கொள்ள செயற்கோள் அனுப்பிய நாடாக இந்தியா இருக்கும்.

சூரியன், பூமிக்கு இடையில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டு, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட அறிவியல் ரீதியான பல ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிப்பாதையில் பயணிக்கிறது. இதுவரை 9 மில்லியன் கி.மீ., தூரம் மங்கள்யான் சென்றுள்ளது.

300 நாட்கள் பயணித்து, 44 கோடி கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை மங்கள்யான் அடையும். இது வெற்றிபெறும் பட்சத்தில் முதல் முயற்சியில் செவ்வாய் சுற்றுவட்டத்தை அடைந்த நாடாக இந்தியா இருக்கும்" என்று அவர் கூறினார்

ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்