Published:Updated:

காவலருக்குக் கொரோனா... போலீஸ் ஸ்டேஷன் மூடல்... கிராமங்களுக்கு சீல்!- பெரம்பலூர் அதிர்ச்சி

வி.களத்தூர் காவல் நிலையம்
வி.களத்தூர் காவல் நிலையம்

17 காவலர்கள் மற்றும் 7 ஊர்க்காவலர் படையினர் என 24 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் உட்பட மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் பணியாற்றிய 24 காவலர்களையும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர். அத்தோடு காவல்நிலையத்தையும் தற்காலிகமாக இடமாற்றம் செய்திருக்கிறார்கள்.

வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
வி.களத்தூர் காவல்நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

அந்த கிராமம் முழுவதையும் போலீஸார் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வந்திருக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வி.களத்தூர் காவல் நிலையம்
வி.களத்தூர் காவல் நிலையம்

இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கட்டமாக 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் இங்கு வைரஸ் பரவலின் வீரியம் குறையாததால் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள், கண்டிப்பாகத் தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் டெல்லி மாநாட்டிற்குச் சென்றுவந்த நபர், அவரின் மைத்துனர், வி.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் என ஒரே ஊரில் மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் வி.களத்தூர் கிராமம் முழுவதும் சுகாதாரத்துறை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

சுழற்சி முறையில் போலீஸார்
சுழற்சி முறையில் போலீஸார்

குறிப்பாக அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் வி.களத்தூர் கிராமம் மக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதை ட்ரோன் மூலம் வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு ஏற்பாட்டின்படி கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. மேலும், காவலருக்குக் கொரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் 17 காவலர்கள் மற்றும் 7 ஊர்க்காவலர் படையினர் என 24 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து வி.களத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது. காவலர்களின் பேருந்து தற்போது காவல் நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. அருகிலுள்ள காவல் நிலையங்களிலிருந்து சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் பணியாற்ற காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவலர் பேருந்து
காவலர் பேருந்து

இதேபோல, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பணியிலிருந்த அனைத்துக் காவல் துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வி.களத்தூர் கிராமத்திற்குள் வேறு நபர்கள் உள்ளே நுழையவும், அங்கிருப்பவர்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு