குமரியில் கடும் மழை பாதிப்பு: அரசு கூடுதல் நிவாரணம்

சென்னை, டிச.10,2010

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பெய்த கடும் மழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்து, அங்குள்ளவர்கள் மீட்கப்பட்டு 33 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவின்பேரில், சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படையில், கடலோர காவல்படை, இராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் மழைநீர் வடியத் தொடங்கியிருந்தாலும்கூட, வெள்ளநீர் சூழ்ந்ததனால், சுமார் 2 ஆயிரம் குடிசைகளும், சுமார் 4 ஆயிரம் நிரந்தர குடியிருப்புகளும் பெருமளவுக்கு
பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஏற்கனவே
ஆணையிட்டுள்ளதுபடி, முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும்,
பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்குவதோடு,
பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிரந்தர குடியிருப்புகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், நிவாரணப் பணிகளை திறம்பட செயல்படுத்தவும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சாலை, ஏரி, கண்மாய் மற்றும் பயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுனில் பாலிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!