வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (17/02/2014)

கடைசி தொடர்பு:12:09 (18/02/2014)

பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து!

 புதுடெல்லி: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரின் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரி முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தங்களது கருணை மனுக்கள் மீது நீண்ட காலமாக முடிவு எடுக்காமல் இருப்பதால், தண்டனையை குறைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இவ்வழக்கில் இரு தரப்பு  வாதங்கள் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளி்த்தது. அதன்படி, 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்தனர்.

கருணை மனு மீது முடிவெடுக்க 11 ஆண்டு தாமதமானதை சுட்டிக்காட்டி தீர்ப்பளித்த நீதிபதிகள், தூக்குத் தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தூக்குத் தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 

மேலும்,  3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

அத்துடன் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்கும்படி மத்திய அரசு கோர வேண்டும் என்றும், கருணை மனுக்கள் மீது இனிமேல் விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்