Election bannerElection banner
Published:Updated:

கமுதி: கடத்தலில் சிக்கிய 2.5 டன் வெடிமருந்து -13 ஆண்டுகளுக்கு பின்னர் அழிப்பு!

 அழிக்கப்பட்ட வெடிமருந்து
அழிக்கப்பட்ட வெடிமருந்து ( விகடன் )

ராமநாதபுரத்திலிருந்து கடல்வழியாக கடந்த 2007-ல் இலங்கைக்குக் கடத்த முயன்ற 2.5 டன் பொட்டாசியம் குளோரைடு, க்யூ பிரிவு போலீஸாரிடம் பிடிபட்டது. வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் இவற்றின் அப்போதைய மதிப்பு 1.75 கோடி ரூபாய்.

கடந்த 2007-ம் ஆண்டில் இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்புக்காகக் கடத்திச் செல்லப்பட்டபோது பிடிபட்ட வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, கமுதி அருகே 13 ஆண்டுகளுக்கு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது.

பொட்டாசியம் குளோரைடு வெடிமருந்து
பொட்டாசியம் குளோரைடு வெடிமருந்து

லெபனான் தலைநகர், பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 27.5 லட்சம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் மருந்து கடந்த 4-ம் தேதி வெடித்தது. ஆறு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த ரசாயனப் பொருளால் ஏற்பட்ட விபத்தில் பல நூறு கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் லெபனானில் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதையடுத்து, மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்தது.

`5 ஆண்டுகள்; 750 டன்!’ - லெபனான் விபத்துக்குக் காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் சேமிப்பு

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சுங்கத்துறை அதிகாரிகளால் சென்னையில் கைபற்றப்பட்ட 7.4 லட்சம் கிலோ அமோனியம் நைட்ரேட், மணலி பகுதியிலுள்ள குடோனில் வைக்கப்பட்டிருப்பதாகவும், `லெபனானில் ஏற்பட்டதுபோல இங்கும் விபத்து ஏற்பட்டுவிடாமல் தடுக்க, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்’ என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்து. இதேபோல் 13 ஆண்டுகளுக்கு முன்னர் க்யூ பிரிவு போலீஸார் கைபற்றிய 2.50 லட்சம் டன் வெடிமருந்து கமுதியிலுள்ள ஆயுதப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆயுதப்படை முகாமின் அருகாமையில் வசித்துவரும் மக்கள் அச்சத்துடனேயே இருந்துவந்தனர்.

அழிக்கப்படும் வெடிமருந்து
அழிக்கப்படும் வெடிமருந்து
விகடன்

ராமநாதபுரத்திலிருந்து கடல்வழியாக, கடந்த 2007-ல், இலங்கை விடுதலைப்புலிகள் கடத்த முயன்ற 2.5 டன் பொட்டாசியம் குளோரைடு, க்யூ பிரிவு போலீஸாரிடம் பிடிபட்டது. வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் இவற்றின் அப்போதைய மதிப்பு 1.75 கோடி ரூபாய். பரமக்குடி நீதிமன்றத்தில் நடந்துவந்த இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. கடத்தலில் ஈடுபட்டவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள 50 மூட்டை பொட்டாசியம் குளோரைடு, கடந்த 2016-ம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்திலுள்ள தனி அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டுவருகிறது.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொட்டாசியம் குளோரைடு வெடிமருந்துப் பொருளை அழிக்க நீதிமன்ற உத்தரவை போலீஸார் எதிர்பார்த்திருந்த நிலையில், சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விரைவில் அவற்றை அழிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில், போலீஸார் முதற்கட்டமாக 500 கிலோ வெடிமருந்துப் பொருள்களை கமுதி அருகே சேகநாதபுரம் பகுதியில்வைத்து, செயலிழக்கச் செய்து அழித்தனர். இதனால் அப்பகுதி புகை மண்டலமாகக் காணப்பட்டது.

 அழிக்கப்பட்ட வெடிமருந்து
அழிக்கப்பட்ட வெடிமருந்து
விகடன்

இது குறித்து, சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் கூறுகையில்,``ஒரே நேரத்தில் இரண்டரை டன் வெடி மருந்து மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடை அழிக்க முடியாது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். போலீஸாரின் இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு