ஜெயலலிதாவின் அரசியல் அவசரத்தால் 7 பேர் விடுதலை ஆவதில் சிக்கல்: கருணாநிதி

சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் அவசரத்தால், ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் கமிஷன் இன்னும் தேர்தலுக்கான தேதியைக்கூட அறிவிக்கவில்லை; ஆனால் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா அவசர அவசரமாக நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பதின் காரணம் என்ன?


வேட்பாளர் அறிவிப்பு- தேர்தல் சுற்றுப்பயண அறிவிப்பு போன்றவை அவசரமாக வெளிவரக் காரணம் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு தான்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த நிதி-அமைச்சர் பன்னீர்செல்வம், “வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தான் கடன் வாங்குகிறோம்” என்று கூறியிருக்கிறாரே?

தி.மு.க. ஆட்சியில் கடன் வாங்குவதைப்பற்றி அடிப்படைப் பொருளாதாரக் கூறுகளைப் புரிந்து கொள்ளாமல் இவருடைய தலைவி ஜெயலலிதா அப்போது எப்படியெல்லாம் கண்டன அறிக்கை விடுத்தார்? தமிழ்நாட்டிலே உள்ள குடிமக்கள் ஒவ்வொருவர் தலையிலும் கழக அரசு 15 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்திருப்பதாக ஜெயலலிதா அறிக்கை விட்டார். தற்போது அதையெல்லாம் மறந்து விட்டு வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தான் கடன் வாங்குவதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்! அவர்கள் கடன் வாங்கினால், அது வளர்ச்சித் திட்டங்களுக்குப் போலும்! தி.மு.க. ஆட்சியில் வாங்குகின்ற கடன்கள் மட்டும் “தளர்ச்சித் திட்டங்களுக்கா?” என்பதை பன்னீர்செல்வம் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவதில் சிக்கல் என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே; அந்த சிக்கலுக்குக் காரணமானவர்கள் யார்?

2011 ஆம் ஆண்டிலேயே, அமைச்சரவையிலே தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று தண்டனையைக் குறைத்த முன்மாதிரி இருக்கிறது, அதைப் பின்பற்றலாம் என்று நான் கருத்து தெரிவித்தபோது, அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் காலம் கழித்தார்கள். தற்போது இந்தப் பிரச்னையை முறையாக, ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்காமல் எப்போதும் போல “எடுத்தேன், கவிழ்த்தேன்” பாணியில் செயல்பட்டதால் “திரிசங்கு” சொர்க்கத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். இவர்கள் காட்டிய “அரசியல் அவசரம் - ஆதாயம்” என்ற காரணத்தால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இதற்குள் விடுதலையாகியிருக்க வேண்டியவர்கள், இன்னும் வெளிவர முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான திட்டத்தில், தமிழகத்திற்கு குறைந்தபட்ச நிதியே ஒதுக்கீடாகச் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?

இந்தியா முழுவதிலும் உள்ள 72 ஆயிரம் கிலோ மீட்டர் தூர மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் வெறும் 30 கிலோ மீட்டர் தூரத்தை மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாம்.

தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிராவில் 600 கிலோ மீட்டர்; ராஜஸ்தானில் 494 கிலோ மீட்டர் தூரம் வரை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படுமாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியில், தமிழகத்துக்கு நெடுஞ்சாலை திட்டங்கள், அதிகம் வந்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் “தமிழகத்துக்கு எந்தச்சாலை திட்டமும் கிடையாது, அதற்கான கோப்புகளைக்கூட, கொண்டு வர வேண்டாம்” என்று சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறாராம்! அதுபற்றி கேட்கவோ, வாதாடவோ மாநில அரசு என்று ஒன்று இருக்கிறதா?

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!