வன்முறையை தமிழகத்தின் பொதுவாழ்விலிருந்து விரட்டியடிக்க வேண்டும்: கி.வீரமணி

சென்னை: வன்முறையை தமிழகத்தின் பொதுவாழ்விலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனைக்குள்ளாகி 23 ஆண்டுகளாக அவர்களது கருணை மனுவை பரிசீலிக்காமல், காலதாமதத்திற்குக் காரணமான மத்திய அரசின் செயல், நீதி கேட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அநியாயம் என்பதால், அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதற்குமுன் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி வழங்கப்பட்ட நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதே இது.

அத்தீர்ப்பில் இதற்குமேல் அவர்களது விடுதலைபற்றி சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய பொறுப்பு உரிய அரசுகளுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டதையொட்டி, தமிழக முதல்வர் அறிவித்த முடிவு மனிதநேய அடிப்படையில் விடுதலை என்ற போதிலும், மத்திய அரசுக்குக் கெடு விதித்து அறிவித்த முறை அவசர போக்கு என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், முடிவு எடுக்கத் தகுதியுள்ள அரசு மாநில அரசு என்பதும் சிறைத் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் சட்டப்படி அதற்கு உண்டு என்பதெல்லாம் சட்டப்பூர்வ நிலைப்பாடே.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் நமக்கு உடன்பாடு இல்லை. மனிதநேய அடிப்படையில், அதற்காக அதனை எதிர்க்கும் வகையில், சில கட்சிகளோ, நபர்களோ, ராஜீவ் காந்தி சிலைகளை உடைப்பது, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தைச் சென்று தாக்குவது என்பது சரியான பரிகாரமோ, முறையாகவோ இருக்காது. அது தவறான வன்முறை வெளிப்பாடாகும்.

எழுப்பப்பட்டுள்ள தலைவர்கள் சிலைகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால், அவற்றை உடைப்பது, ஊனப்படுத்துவது அசல் அரசியல் அநாகரிகம் ஆகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மனிதநேயம் உள்ள எவரும் ஏற்கமாட்டார்கள் என்றாலும், அதற்கு மாற்று, சிலைகள் மீதும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் என்பது தவறான அணுகுமுறையாகும். ஆர்ப்பாட்டக்காரர்களை முன்கூட்டியே அப்புறப்படுத்தி அதன்மூலம் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும்.

அதுபோலவே, கட்சித் தலைவர்கள் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் முறையாகாது. அதனையும் கண்டிக்கிறோம். வன்முறையை தமிழகத்தின் பொதுவாழ்விலிருந்து விரட்டியடிக்கவேண்டும். காவல்துறையும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!