வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (28/02/2014)

கடைசி தொடர்பு:12:08 (01/03/2014)

பெட்ரோல் விலை நிர்ணயக்கொள்கை மாற்ற 3 மாதத்தில் நடவடிக்கை: ஜெயலலிதா

சென்னை: பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றியமைக்க 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வின் காரணமாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாகவும், மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய மக்கள் ஆயத்தமாகி வரும் சூழ்நிலையில், விலைவாசி மேலும் உயருவதற்கு வழிவகுக்கும் வகையில், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 காசு வீதமும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு வீதமும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது, தட்டிக் கேட்க ஆளில்லாத சண்ட பிரசண்டனாக தன்னை மத்திய காங்கிரஸ் அரசு கருதி உள்ளதாகவே தோன்றுகிறது. இந்த விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கும். இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கம் போல, சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்றும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது என்றும் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இவ்வாறு மாதா மாதம் பெட்ரோல், டீசல் விலையினை உயர்த்துவது ஏழை, எளிய இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வினை அடுத்து, லாரி, மற்றும் தனியார் வாகனங்களுக்கான கட்டணங்கள் உயரும். இதன் விளைவாக, மாணவ-மாணவியர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இது மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் மேலும் உயரும். இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஏழை எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக் கூடிய பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

எது எப்படி ஆயினும், இத்தகைய துன்பத்தை மக்கள் இன்னும் மூன்று மாதங்கள் தான் தாங்க வேண்டிய நிலை இருக்கும். அதன் பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்