Published:Updated:

`கரூர் எங்களுக்கு இன்னொரு வீடு; திரும்பி வருவோம்!’ - உ.பி அனுப்பி வைக்கப்பட்ட 254 தொழிலாளர்கள்

உ.பி தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
உ.பி தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

'கரூர் எங்களை வாழ வைத்த பூமி. எங்கள் குடும்பத்திற்கு சோறு போட்ட மாதா மாதிரி. இன்னும் சொல்லப்போனால், கரூர் எங்களுக்கு மறுவீடு மாதிரி. இந்த ஊரை எங்களால் மறக்கமுடியாது. விரைவில் கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும். நாங்களும் கரூருக்கு மறுபடியும் வருவோம். அந்த நல்ல நாள் விரைவில் வரும்'

கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்கு போக முடியாமல் தவித்த, கரூர் மாவட்டத்தில் தங்கியிருந்த உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேந்த 254 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடந்தது. கண்ணீர் மல்க விடைபெற்ற அத்தனை தொழிலாளர்களும், `கரூர் எங்களுக்கு மறுவீடு மாதிரி;விரைவில் திரும்பி வருவோம்' என்று சொல்லி சென்றது, உருக்கமான நிகழ்வாக அமைந்தது.

உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள்.

`திருப்பூரிலிருந்து நடந்தே கரூர் வந்த தொழிலாளி!' -250 கி.மீ தூரத்தைக் கடக்க உதவிய செந்தில் பாலாஜி

அந்த நிகழ்வின் தொடக்கமாக, உத்திரபிரதேச மாநிலத்தைச் சேந்த 254 தொழிலாளர்களை, 7 பேருந்துகளின் மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு, கரூர் மாவட்ட ஆட்சியகத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் கொடியசைத்து, வழியனுப்பி வைத்தார்.

உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால், பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதனையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள, பிற மாநிலத் தொழிலாளர்களில், அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களை அனுப்பிவைக்க, போதிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, கரூர் மாவட்டத்தில் உள்ள, உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 254 நபர்களை திருச்சியில் இருந்து ரயில் மூலம் உத்திரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொழிலாளர்கள் 254 நபர்களையும் சமூக விலகலுடன் நிற்கவைத்து, அனைவரது கைகளிலும் சுத்தம் செய்யும் திரவம் தெளித்து, முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு, கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, பின்னர் பாதுகாப்பாக பேருந்தின் மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். கரூர் மாவட்டம் தொழில் நகரம் என்பதால், இங்கே 14 மாநிலங்களைச் சேர்ந்த 7,779 நபர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

இவர்களில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 72 நபர்களும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 254 நபர்களும், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 13 நபர்களும், பீகாரைச் சேர்ந்த 604 நபர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த 60 நபர்களும், அஸ்ஸாமைச் சேர்ந்த 48 நபர்களும், கர்நாடகாவைச் சேர்ந்த 25 நபர்களும், ஒடிசாவைச் சேர்ந்த 460 நபர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 936 நபர்களும், ஜார்கண்டைச் சேர்ந்த 202 நபர்களும், சத்தீஸ்கரைச் சேர்ந்த 74 நபர்களும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 நபர்களும், கேரளாவைச் சேர்ந்த 15 நபர்களும், பஞ்சாபைச் சேர்ந்த 6 நபர்களும் என மொத்தம் 2,802 நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் முதற்கட்டமாக, உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 254 நபர்கள், திருச்சியில் இருந்து ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். மீதமுள்ளவர்களும் தொடர்ந்து அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள்.

உ.பி தொழிலாளர்கள் கூறுகையில், ``கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைத்து, நல்ல உணவும் அளித்து, தற்போது எங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் நன்றி.

உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
உ.பிக்கு செல்லும் தொழிலாளர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் எங்களை வாழ வைத்த பூமி. எங்கள் குடும்பத்திற்கு சோறு போட்ட மாதா மாதிரி. இன்னும் சொல்லப்போனால், கரூர் எங்களுக்கு மறுவீடு மாதிரி. இந்த ஊரை எங்களால் மறக்க முடியாது. விரைவில் கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும். நாங்களும் கரூருக்கு மறுபடியும் வருவோம். அந்த நல்ல நாள் விரைவில் வரும்" என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிவிட்டு, பேருந்துகளில் ஏறிச் சென்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு