Published:Updated:

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 26 பசுக்கள்; 4 மணி நேரப் போராட்டம்! - உயிரோடு மீட்கப்பட்டது எப்படி?!

பழையார் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2 ஃபைபர் படகுகள், நீச்சல் வீரர்கள், கால்நடை மருத்துவர் சரவணன், உதவியாளர் ராமச்சந்திரன், மருத்துவக்குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கொள்ளிடம் ஆற்றின் நடுவே திட்டுப் பகுதியில் சிக்கித்தவித்த 26 பசுமாடுகளை அரசின் அனைத்துத் துறையினரும் இணைந்து படகுகள் மூலம் பத்திரமாக மீட்டுத் தந்ததற்கு பாராட்டுகள் குவிகின்றன.

பசுக்கள்
பசுக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் திட்டு போன்ற பகுதி இருக்கிறது. இங்கு சந்தைப்படுகை கிராமத்தினருக்குச் சொந்தமான மாடுகள் தினந்தோறும் சென்று மேய்ந்து, மீண்டும் தாமாகவே திரும்பி வந்துவிடுவது வழக்கம். சில மாடுகள் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் 50,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆற்றின் நடுவேயுள்ள திட்டுப்  பகுதியில் 26 பசுமாடுகள் சிக்கிக்கொண்டு தவித்தன. தண்ணீர் சூழ்ந்துகொண்டதால் மாடுகளால் வெளியே வர முடியவில்லை. இதனால் மாடுகளின் உரிமையாளர்கள் அச்சமடைந்து வேதனையில் ஆழ்ந்தனர். இது குறித்து காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

நீச்சல்குளமான சுரங்கப்பாதை; மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்! - சென்னை மழை வெள்ளத்தில் ஒரு நாள்!

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் சீர்காழி டி.எஸ்.பி ரமேஷ், இன்ஸ்பெக்டர் அமுதாராணி உள்ளிட்ட 30 போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களுடன் சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், மாடுபிடி வீரர்கள் கொண்ட மீட்புக்குழு அமைக்கப்பட்டது.

பழையார் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு ஃபைபர் படகுகள், நீச்சல் வீரர்கள், கால்நடை மருத்துவர் சரவணன், உதவியாளர் ராமச்சந்திரன், மருத்துவக்குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொள்ளிடம் ஆற்றுப் பாலத்திலிருந்து கீழே இறங்கி மாடுகளை ஒவ்வொன்றாகப்  பிடித்து படகில் ஏற்றி, கரைக்குக் கொண்டுவர திட்டம் தீட்டினர். சுமார் நான்கு மணி நேரம் போராடி இரண்டு படகுகளைப் பயன்படுத்தி 26 பசுமாடுகளையும் ஒவ்வொன்றாக பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.

பசுக்கள்
பசுக்கள்

இது குறித்து சந்தப்படுகையைச் சேர்ந்த பசுமாடுகளின் உரிமையாளர்களிடம் பேசினோம். ``எங்க மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் சிக்கித் தவித்தன. தண்ணீர் சூழ்ந்துகொண்டதால் பசு மாடுகளை வெள்ளம் அடித்துச் சென்று விடுமோ என்ற அச்சத்தில் இருந்துவந்தோம். அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தன் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள், அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எங்களின் அனைத்து மாடுகளையும் பத்திரமாகப் படகின் மூலம் மீட்டு வந்து கரை சேர்த்தனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து உதவி புரிந்து, அனைத்து பசுமாடுகளையும் பத்திரமாக மீட்டுக் கொடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு